கடலூர் அருகே காவலர் தேர்வு எழுத வந்த மச்சினிச்சியை தோழியுடன் காரில் கடத்த முயன்று அக்காவின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் ரசிதா வயது 21. இவரது அக்காவின் கணவர் சாந்த சிவம் வயது 33. கடலூரில் இரண்டாம் நிலை காவல் தேர்வு எழுதுவதற்காக நேற்று முன் தினம் ரசிதா மற்றும் அவரது தோழி ஆகியோர் கடலூருக்கு வந்திருந்த நிலையில், மீண்டும் வீடு திரும்ப தேர்வு மையத்தில் நின்று இருந்தனர். அப்போது அங்கு வந்த ரசிதாவின் மாமா சாந்த சிவம் இருவரையும் காரில் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்ற நிலையில், வழியில் சார்ந்த சிவத்தின் நண்பர்கள் சிலரும் காரில் ஏறி உள்ளனர்.

இதில் சந்தேகம் அடைந்த ரசிதா தன்னை காரில் இருந்து இறக்கி விடும்படி கேட்டுக் கொண்ட நிலையில், அவரை காரில் இருந்து இறக்காமல் தொடர்ந்து கடத்தி செல்ல முயன்றார். இந்த நிலையில் கடலூர் அருகே சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், ரசிதா தனது தோழியுடன் காரில் இருந்து குதித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் ரசிதா அவரது தோழியுடன் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து கடத்திய ரசிதாவின் மாமா சாந்த சிவா அவரது நண்பர்கள் கோபு வயது 33, கிருஷ்ணராஜா வயது 36, உள்ளிட்ட 3 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்ததுடன் மட்டுமல்லாமல் காரையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் சாந்த சிவம் இரண்டாவது திருமணம் செய்ய ரசிதாவை கடத்தியது தெரிய வந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் தேர்வு எழுத வந்த இரண்டு பெண்களை காரில் கடத்திய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.