பாசி நிதி நிறுவன அதிபரை கடத்தி, லஞ்சப்பணம் பெற்ற வழக்கில் ஏ.டி.ஜி.பி அருண் உட்பட 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள், அந்த நிறுவன ஊழியர்கள் என 8 பேர், சாட்சியம் அளிப்பதற்காக வரும் 21 ஆம் தேதி சம்மன் அனுப்ப கோவை சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் 930 கோடி ரூபாய் மோசடி செய்தது. இந்த மோசடி வழக்கில், அந்நிறுவனத்தின் பெண் இயக்குநர் கமலவள்ளியை என்பவரை கடத்தி அவரிடம் இருந்து 2.5 கோடி லஞ்சமாக பணம் பறித்ததாக அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி பிரமோத் குமார், அப்போதைய சி.பி.சி.ஐ.டி, டி.எஸ்.பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், இடைத்தரகர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன், திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற தரணி செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், நீண்ட நாட்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் வழக்கு விசாரணையானது விறுவிறுப்படைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐ.ஜி. பிரமோத்குமார் உட்பட ஐந்து பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய 8 பேர் கொண்ட சாட்சிகள் பட்டியலை இன்று சி.பி.ஐ தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதில் தற்போது மத்திய அரசின் செயலாளராக இருக்கும் நடராஜன், ஓய்வுபெற்ற ஐ.ஜி சுந்தரமூர்த்தி, அப்ரூவராக மாறிய உதவி ஆய்வாளர் சண்முகய்யா, நிதி நிறுவன அதிபர் கமலவள்ளியின் கார் ஓட்டுனர் கருணாகரன், பாசி நிறுவன கணக்காளர் மணிகண்டன், ஏ.டி.ஜி.பி பால நாகதேவி IPS, தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருண் IPS, ஜ.ஜி கண்ணன் IPS ஆகிய எட்டு பேருக்கும் சாட்சியளிக்க நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப கோவை சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் 8 பேரும் வருகிற 21, 22 ஆம் தேதிகளில் கோவை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளிக்க இருக்கின்றனர்.