கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த கருணாபுரம் பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக மலை சாராயம் என்ற பெயரில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை சிலர் குடித்துள்ளனர். அன்று இரவே பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. விஷச்சாராயம் குடித்தது தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 34-ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது சகோதரர் தாமோதரன், மனைவி விஜயா ஆகியோரை கைது செய்தனர்.