குடும்பத் தகராறில் மனைவியைக் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய கணவரைக் காவல் துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மோ. வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் விஜயா. 20 வயதான இவர் பல்லகச்சேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று முருகன் தன் மனைவி விஜயாவை சந்திக்க ஊருக்குச் சென்றுள்ளார். முருகன் தன்னுடன் சேர்த்து வாழுமாறு விஜயாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு மறுப்புத்தெரிவித்த விஜயாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயாவை கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.அப்போது அவரை தடுக்க வந்த உறவினர்கள் இருவரையும் முருகன் தாக்கியுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் சத்தியசீலன் அங்கு கத்தியோடு நின்றிருந்த முருகனைப் பிடிக்க முயற்சித்தபோது, அவர் உதவி ஆய்வாளர் சத்தியசீலனையும் கத்தியால் குத்தி காயப்படுத்தினார்.காயமடைந்த உதவி ஆய்வாளர் சத்தியசீலன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்பட்டார் .சம்பவம் அறிந்த கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் முருகன் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் முருகனிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவரது மனைவி விஜயாவை கொலை செய்வதற்கு முன் தானும் எலி மருந்து சாப்பிட்டு விட்டு வந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் முருகனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர். மருத்துவமனையில் இருந்து குணமடைந்து திரும்பிய முருகனை காவல்துறையினர் கைது செய்தனர்.