திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள அச்சமங்கலம் ராஜி என்பவருடைய நிலத்தில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இரவில் திடீரென 5 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த நேரத்தில் ஒரு வெடி சத்தம் போல கேட்டதாக தெரிவிக்கும் ஊர்மக்கள், வானத்தில் இருந்து ஏதோ மர்ம பொருள் விழுந்ததால் தான் இந்த பள்ளம் ஏற்பட்டதாக தெரிவித்தனர், இந்த தகவல் பக்கத்து ஊர்களுக்கும் பரவியது.

இந்த நிலையில், அந்த பள்ளத்திலிருந்து ஓரிரு நாள்களாக அதிக வெப்ப அனல் வெளியேறுவதாகவும் தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் மட்டுமன்றி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களும் பீதியடைந்திருக்கின்றனர்.
இதை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று நேரில் சென்று அந்த இடத்தை பார்வையிட்டார். அதை தொடர்ந்து, “மாவட்ட அறிவியல் மைய அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்’’ என்று தெரிவித்த ஆட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மூலமாக அந்த பள்ளத்தை தகடுகள் கொண்டு மூட செய்தார். மண் மாதிரிகளும் சேகரித்து ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
இதனிடையே, விழுந்தது என்னவென்றே தெரியாததாலும், பள்ளம் ஏற்பட்டதுக்கு சிலர் ஏலியன் கதை சொல்லி பீதியை கிளப்பியிருப்பதாலும் திருப்பத்தூர் மாவட்டமே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.