அவசர சிகிச்சை வழங்கப்படும் ஜிப்மர் மருத்துவமனை உத்தரவாதம்..!

2 Min Read

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கையொட்டி இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை பிற்பகல் 2:30 மணி வரை மூடப்பட்டாலும் அவசர சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் நடைபெறும் என்று மருத்துவமனை தரப்பு உத்தரவாதம் அளித்ததால் வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கையொட்டி நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு இன்று பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை அறிவித்து நேற்று முன்தினம் ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது.

- Advertisement -
Ad imageAd image
அவசர சிகிச்சை வழங்கப்படும் ஜிப்மர் மருத்துவமனை உத்தரவாதம்

அதன் அடிப்படையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று பிற்பகல் 2:30 மணி வரை புற நோயாளிகள் பார்வை இல்லை என்றும், மருத்துவமனை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ரத்து செய்து மருத்துவமனையை மூடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் அமைப்பின் நிறுவனர் புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மருத்துவமனை மூடப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.

அப்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு தேதி பெற்றவர்கள் மீண்டும் அந்த வாய்ப்பை பெற 3 மாதங்களாகலாம். மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக தேதி நிர்ணயிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவர். இந்த மருத்துவமனையை மூட வேண்டாம் எனக் கூறி ஒன்றிய அரசுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த பொது நல மனு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

உயர்நீதிமன்றம்

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி, புதுச்சேரி, தமிழ்நாடு மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வருகிறார்கள் என்று வாதிட்டார். அதற்கு மருத்துவமனை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், 22 ஆம் தேதி எந்த முக்கிய அறுவை சிகிச்சைக்கும் நாள் குறிக்கப்படவில்லை. அவசர சிகிச்சை வழக்கம் போல் தொடரும். அத்தியாவசிய சிகிச்சை வழங்குவதிலும் சிக்கல் ஏற்படாது என்றார்.

இதனை அடுத்து நீதிபதிகள், அத்தியாவசிய சிகிச்சைகள், விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் பரிசோதனை, சிகிச்சை ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a review