- அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் மற்றும் அவரது துணை அதிபர் வேட்பாளரான ஜே.டி. வான்ஸ் ஆகியோர் தொலைப்பேசி உரையாடல்களைச் சீன ஹேக்கர்கள் ஒட்டுக் கேட்க முயல்வதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வுத் துறையும் விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவில் அடுத்த வாரம் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே கடும் போட்டி நடைபெறுகிறது. கடைசிக் கட்ட பிரச்சாரமும் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் மற்றும் அவரது துணை அதிபர் வேட்பாளரான ஜே.டி. வான்ஸ் ஆகியோர் தொலைப்பேசி உரையாடல்களை ஹேக் செய்யச் சீன ஹேக்கர்கள் முயல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் பிரபல நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நன்கறிந்த சிலர் நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்த ஹேக்கிங் முயற்சி சீன ஹேக்கர்களின் செயல்தான். உளவு சேகரிக்கும் ஒரு முயற்சியாகவே அவர்கள் இதைச் செய்துள்ளனர்” என்றார். நம்ம ஊர் ஏர்டெல், ஜியோ போல அமெரிக்காவில் வெரிசோன் டெலிகாம் நிறுவனம் பிரபலமானது. அந்த டெலிகாம் நிறுவனத்தின் நெட்வோர்க்கை ஊடுருவி ஹேக் செய்யும் முயற்சி நடந்துள்ளது.
இந்த ஹேக்கிங் முயற்சியில் எதாவது தகவல்கள் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்து இப்போது விசாரணை தொடங்கியுள்ளது. டிரம்ப் மட்டுமின்றி கமலா ஹாரிஸ் மற்றும் அவரது துணை வேட்பாளரான டிம் வால்ஸ் ஆகியோரின் பிரச்சாரத்தைக் குறிவைத்தும் இந்த ஹேக்கிங் முயற்சி நடந்துள்ளது.
வெரிசோன் நிறுவனம் இது குறித்துத் தெளிவான பதிலை அளிக்கவில்லை. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ரிச் யங், “குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள் அமெரிக்கத் தொலைத்தொடர்பு நெட்வோர்க்கை குறிவைத்துள்ளது எங்களுக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று மட்டும் தெரிவித்தார். யார் அவர்கள்: சீனாவை சேர்ந்த சாட்ல் டைபூன் என்று அழைக்கப்படும் சீன ஹேக்கிங் குழு இதைச் செய்துள்ளது.
டிரம்ப்-வான்ஸ் பிரச்சார குழுவில் உள்ள இரண்டு ஊழியர்களின் தொலைப்பேசிகளை ஹேக்கிங் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து எஃப்.பி.ஐ நேரடியாக எந்தவொரு கருத்தும் கூறவில்லை.
அதேநேரம் எஃப்.பி.ஐ மற்றும் சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு அமைப்பு இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சீனா அரசுடன் தொடர்புடைய சிலர் அமெரிக்கத் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை அணுக முயன்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று மட்டும் தெரிவித்துள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-meteorological-department-has-said-that-there-is-a-chance-of-rain-on-diwali/
அமெரிக்காவில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சர்வேக்களில் இரு தரப்பிற்கும் இடையே போட்டி கடுமையாகவே இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.