ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்களை எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.
மும்பை அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 28 ரன்களும், இஷான் கிஷன் 38 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன் 40 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். சூர்ய குமார் யாதவ் 7 ரன்னில் வெளியேற தில வர்மா 37 ரன்களும், டிம் டேவிட் 16 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 192 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் மார்கோ ஜேன்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். கடந்த போட்டியில் சதம் அடித்த ஹேரி ப்ரூக் 9 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். மயங்க் அகர்வால் 41 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். ராகுல் திரிபாதி 7 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 22 ரன்களும் எடுக்க, அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ஹெய்ரிச் கிளாசன் 16 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.
கடைசி சில ஓவர்களை சிறப்பாக வீசிய மும்பை அணியின் பவுலர்கள் அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஐதராபாத் அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் மும்பை அணி 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.