மேற்கு தொடா்ச்சி மலை பகுதியில் கனமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அணை மற்றும் குளங்களில் நீா்மட்டம் அதிகரித்து உள்ளது.
மேற்கு தொடா்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக மேற்கு தொடா்ச்சி மலை மற்றும் கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது.

மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டு உள்ளது. மேலும், கனமழை காரணமாக மேற்கு தொடா்ச்சி மலையில் பல இடங்களில் புது அருவிகள் உருவாகி உள்ளன. நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி வழிகிறது.
புதுக்குளம், நரசாம்பதி, கோளராம்பதி, பேரூா் சொட்டையாண்டி குளம், குனியமுத்தூா் செங்குளம், கங்க நாராயண சமுத்திர குளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்து உள்ளது.

கோவை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. சாலைகளில் மழைநீருடன், கழிவுநீா் கலந்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா்.