இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 2 ஆவது இன்னிங்ஸில் 399 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் 292 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது இங்கிலாந்து அணி.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், இங்கிலாந்தும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. அப்போது 3 ஆவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களும், 2 ஆவது இன்னிங்ஸில் 255 ரன்களும் எடுத்திருந்தது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 253 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 399 ரன்களை 2-ஆவது இன்னிங்ஸில் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். இருப்பினும் 69.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த அவர்களால் 292 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தரப்பில் ஜாக் கார்லே 73 ரன்கள் குவித்திருந்தார். இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என்று சமன் செய்துள்ளது. இந்திய தரப்பில் அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ந் தேதி தொடங்குகிறது.