தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் சனிக்கிழமை மதியத்திலிருந்து அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் தான் பொதுமக்கள் எவ்வளவு பணத்தை ஆவணங்களின்றி கையில் எடுத்து செல்லலாம். ஒருவேளை அதிக பணத்தை எடுத்து சென்று பறக்கும்படையிடம் சிக்கினால் அடுத்து என்ன நடக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கடந்த 2019-ல் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது.

அதேபோல் தான் வரும் லோக்சபா தேர்தலும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும்.
முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவத்காக தான் இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்ட போது வேகமாக வந்த ஒரு வேனை மடக்கி சோதனையிட்டனர்.

அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளதாக தகவல் தெரியவந்தது. அதனை முன்னிட்டு அந்த வண்டியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர்.
அப்போது விசாரணையில் சென்னையில் மிக பிரபலமாக உள்ள ஜி.ஆர்.டி தங்க நகை கடையில் உற்பத்தி செய்யப்படும் தங்க நகை ஆபரணங்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பல கிளைகளுக்கு நகைகளை டெலிவரி செய்வதற்காக எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மார்க்கமாக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பாதை மாற்றி வையாவூர் பகுதி வழியே சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மடக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, வருமானவரி துறையினர், வருவாய் துறையினர், தாலுக்கா காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வாகனத்தில் கொண்டு வந்த ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் வாகன ஓட்டுனர் இடமும் ஜி.ஆர்.டி தங்க கடை அலுவலர்களிடமும் தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். காஞ்சிபுரம் அருகே பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் சிக்கியதாக வந்த தகவலால் மிகுந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.