புதுச்சேரி மாநிலத்தில் அளவுக்கு அதிகமான மதுக்கடைகள் அருகருகே இருப்பதும், குடிமகன்கள் மதுவை வாங்கிக் கொண்டு பொது இடங்களில் கூட்டாக அமர்ந்து மது குடிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் குற்றவாளிகள் தவறு செய்ய திட்டம் தீட்டுவதற்கும் மது போதையில் எதிராளிகளை பழிக்குப்பழி வாங்க குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் இந்த சூழல் ஒரு மூலதனமாக உள்ளது. மேலும் தனியாக செல்பவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுகிறது.
தற்போது தவளக்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட டி.என். பாளையம், அபிஷேகப்பாக்கம் அருகே அயிற்றூர் மகாதேவர் சிவன் கோயில் தெப்பக்குளம், தனியார் அப்பார்ட்மெண்ட் மற்றும் கிரிக்கெட் விளையாடும் தனியார் மைதானம் உள்ளது. இதேபோல் ரெட்டிச்சாவடி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட சிங்கிரி குடியில் நரசிம்மர் கோயில், தனியார் இண்டர்நேஷ்னல் பள்ளி என அனைத்தும் நிறைந்த பகுதியாக உள்ளது.

அந்த பகுதிகளான அரவிந்தர் நகர், குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் காலை, மாலை, இரவு என முழுநேரமும் மதுப்பிரியர்கள் கூட்டாக அமர்ந்து மது குடிப்பதையும், ரகளையில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதுகுறித்து தவளக்குப்பம் மற்றும் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அவ்வப்போது அங்கு ரோந்து செல்லும் இரு பகுதி காவலர்களுக்கிடையே எல்லைகள் சம்மந்தமான சந்தேகங்கள் எழுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் பொது இடத்தில் மது அருந்துவது தவறு என்று தமிழக போலீசார் எச்சரித்தால் சுமார் 10 அடி தூர வித்தியாசத்தில் சார் இது பாண்டிச்சேரி, எங்களுக்கு இது கூட சுதந்திரம் இல்லையா? என்று மது போதையில் ஏற்ற இறக்கமாக பேசுவது வாடிக்கையாகி விட்டது. புதுச்சேரி போலீஸ் சென்றால் இது தமிழக பகுதி என்று கூறுகின்றனர். ஆங்காங்கே மது அருந்தி விட்டு பீர் பாட்டில்களை பொது இடங்களில் வீசிவிட்டு செல்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மது அருந்த தடை, மீறினால் தண்டிக்கப்படுவீர் என்று தவளக்குப்பம் காவல்துறை மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெறும் அதே பகுதியில் உள்ள 5 இடங்களில் இரும்பு பலகைகள் வைக்கப்பட்டது. அதனை உடைத்து மதுப்பிரியர்கள் பழைய இரும்புக்கடையில் போட்டு மது குடித்துவிட்டனர். இந்த நிலையில் பொது இடங்களை மதுக்குடிக்கும் இடமாக மாற்றி அட்டூழியம் செய்வதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
மேலும், கஞ்சா, வழிப்பறி, கொள்ளை, கொலை செய்ய திட்டம் தீட்டுவது மற்றும் மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதால் சாலை விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே பொது இடத்தில் மது அருந்துவதை தடுக்க காவல்துறை ரோந்து பணியை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் பொது இடங்களில் மது அருந்தினால் அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.