- கும்பகோணம் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சரண்ராஜ் என்ற ரவுடியை பட்டப் பகலில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்ததில் கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பழவத்தான் கட்டளை பாரதி நகரை சேர்ந்த சரண்ராஜ் (25) இவர் மீது கொலை வழக்கு உட்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது .
நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் இவரது பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தன் மீது உள்ள வழக்கு ஒன்று தொடர்பாக திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது திருநாகேஸ்வரம் சீனிவாசநல்லூர் அனுமார் கோவில் அருகே மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரண்ராஜை சுற்றி வளைத்து சரமாரி வெட்டிவிட்டு தப்பினர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரண்ராஜை ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சரண்ராஜ் கொண்டு செல்லப்பட்டார்.
இது தொடர்பாக திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இச்சம்பவத்தில் திருப்புரம்பியத்தை சேர்ந்த ரவுடியான மாயா என்கிற சிலம்பரசன் தலைமையில் செக்காங்கண்ணியைச் சேர்ந்த சகோதரர்களான பிரவீன், சூர்யா, திருவலஞ்சுலியைச் சேர்ந்த அண்ணாதுரை உள்பட ஒன்பது பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் சீனிவாசநல்லூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அண்ணாதுரை, பிரவீன், சூர்யா ஆகியோர் போலீசாரை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளனர். அவர்களை போலீசார் விரட்டி சென்ற நிலையில் மூன்று பேரும் தடுமாறி கீழே விழுந்ததில் கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சிலம்பரசன் உள்பட ஆறு பேரையும் கும்பகோணத்தில் வெவ்வேறு இடங்களில் போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-madurai-session-of-the-madras-high-court-quashed-the-order-issued-by-the-state-level-inspection-committee-of-the-adi-dravida-welfare-department/
இச்சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, கும்பகோணம் பெரிய கடை தெருவில் உள்ள துணிக்கடையை காலி செய்வது தொடர்பாக கட்டப்பஞ்சாயத்துக்கு மாயா என்கிற சிலம்பரசன் சென்றபோது அங்கு எதிர்த்தரப்பிற்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்ய சரண்ராஜ் வந்ததாகவும், அதில் யார் பெரிய ரவுடி என்பதில் தகராறு இருவருக்குள்ளும் ஏற்பட்டதாகும், அதன் எதிரொலியாக சிலம்பரசன் தனது ஆட்களுடன் சரண்ராஜ் வெட்டி இருப்பதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் ரவுடியை பட்டப்பகலில் 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.