சென்னை மாதவரம் கே.கே.ஆர் கார்டன்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான புரோட்டின் மருந்து விற்பனை கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் கடந்த சில மாதங்களாகவே சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்குத் தகவல் கிடைத்தது.
இதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், மாதவரம் உணவு பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி மற்றும் குழுவினர் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இந்த கடையில் சட்ட விரோதமாக தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தது உறுதியானது. அதை தொடர்ந்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், நேற்று காலை முழு சோதனையில் ஈடுபட்டனர்.
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரி அருளானந்தம் சோதனையை மேற்பார்வையிட்டார். இந்த சோதனையில் 100 மி.லி அளவு கொண்ட 90-க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில் 40-க்கும் மேற்பட்ட பாட்டில்கள் லேபிள் ஒட்டாத பதப்படுத்தப்படாத தாய்ப்பாலாகும். தொடர்ந்து கடையின் உரிமையாளர் செம்பியன் முத்தையாவிடம் (40) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், அருகே உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்தும், தன்னார்வலர்களிடம் இருந்தும் கடையின் உரிமையாளர் தாய்ப்பாலை பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
மேலும் தாய்ப்பால் மாதிரிகள், புரோட்டீன் பவுடர்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். சோதனை தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறியதாவது;- இந்த கடைக்கு புரோட்டீன் பவுடர் விற்பதற்கு தான் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கடையின் உரிமையாளர், தாய்ப்பாலை விற்பனை செய்து வந்துள்ளார். எடுக்கப்பட்ட மாதிரிகள் கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல எந்த தாய்மார்களிடம் இந்த தாய்ப்பாலை பெற்றுள்ளார் என்பதற்கான விவரங்களை தற்போது கைப்பற்றி உள்ளோம்.

இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தாய்ப்பாலை இயற்கையாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ததை குழந்தைகளுக்குத் தரக்கூடாது.
தாய்ப்பாலை வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது. இதற்கு அங்கீகாரம் கிடையாது. விசாரணை முழுமை பெற்ற பின் முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கடையின் உரிமையாளர் முத்தையா செய்தியாளர்களிடம் கூறியதாவது;- இந்தியாவில் தாய்ப்பால் தேவை அதிகமாக உள்ளது. இதனையொட்டி மார்ச் மாதம் முதல் தாய்ப்பாலை விற்பனை செய்யத் தொடங்கினோம்.

அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ரயில்வே மருத்துவமனைகளுக்குச் சென்று தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, தாய்ப்பாலை சேகரிப்போம். இந்த நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்திருப்பது தெரியவந்தது.
எனவே தாய்ப்பால் விற்பனை செய்வதை நிறுத்தி விட்டோம். இதுவரை 10 பாட்டில்களை மட்டுமே விற்பனை செய்துள்ளோம். மீதம் இருந்தவற்றை அப்புறப்படுத்துவதற்காக மட்டுமே வைத்திருந்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.