- மதுரை உள்ள கடன் வசூல் தீர்ப்பாயம் அலுவலர்கள் விடுப்பில் உள்ளதால் கேரள மாநிலம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது நீதிபதி கருத்து.
மத்திய அரசின் செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களையே அழிப்பது போல் உள்ளது நீதிபதிகள் வேதனை. நீங்கள் பேசுவதெல்லாம் செய்தியாக போட்டு விடுவார்கள் – ஒன்றிய அரசின் வழக்கறிஞர் நீதிபதியிடம் குற்றச்சாட்டு. ஊடகங்களில் செய்திகள் வெளியாகினாலாவது தீர்வு காணப்படுமா? என பார்ப்போம் என நீதிபதிகள் கருத்து.வங்கியின் ஏல நடவடிக்கைக்கு தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
திருச்சியைச் சேர்ந்த தனபாலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார் அதில் நான் நிறுவனம் நடத்த திருச்சி கனரா வங்கியில் சுமார் 1.7 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தேன்.
இந்நிலையில் கடனை முறையாக செலுத்தவில்லை என்று கூறி எனது சொத்துக்களை ஏல விட வங்கி நிர்வாகம் நாளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால் ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இதே போல் உயர்நீதிமன்ற மதுரை கிளை வரம்பிற்கு உட்பட்ட மாவட்டங்களில்
வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால், தங்களது வாகனம், வீடு, சொத்துக்கள் போன்றவற்றை ஏலம் விடுவதாக அறிவித்து வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் நீதிபதிகள் சுப்புரமணியன், சுந்தர்மோகன் அமர்வு முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்டன.
இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடன் வசூல் தீர்ப்பாயத்தில் (DRT) சென்று நிவாரணம் பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.ஆனால் மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் பல வழக்குகளில் மனுதாரர்கள் தரப்பில், மனுதாரர்களை கேரளா எர்ணாகுளம் கடன் வசூல் தீர்ப்பாயம் சென்று நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என கூறப்படுவதாக தெரிவித்தனர்.
அதற்கு நீதிபதிகள், ” சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களிலும் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் உள்ளன. ஆனால் மூன்று தீர்ப்பாயங்களும் முறையாக செயல்படுவதாக தெரியவில்லை. மதுரையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் வசூல் தீர்ப்பாய அதிகாரி நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் தற்போது விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கோவையில், வசூல் தீர்ப்பாய அதிகாரி பணியிடம் காலியாக உள்ள நிலையில், மதுரை அதிகாரியும் விடுப்பில் சென்று இருப்பதால், மனுதாரர்களை கேரளா எர்ணாகுளம் செல்லுமாறு கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. ஒன்றிய அரசின் இந்த செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது.
ஒன்றிய அரசு கடன் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால் சொல்லி விடுங்கள் நாங்களே வழக்குகளை நடத்திக் கொள்கின்றோம் எனக் கூறிய நீதிபதிகள் கடன் தீர்ப்பாயம் நிலை குறித்து ஒன்றிய நிதித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என குறிப்பிட்டார்.
அதற்கு ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நீதிபதிகள் கூறும் கருத்துக்களை உடனடியாக ஊடகங்கள் வெளியிட்டு விடுகின்றன” என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், ” ஊடகங்களில் செய்திகள் வெளியாகினாலாவது தீர்வு காணப்படுமா? என பார்ப்போம் என குறிப்பிட்ட நீதிபதிகள். மதுரை, கோவை கடன் வசூல் தீர்ப்பாயங்கள் முறையாக செயல்படுவது குறித்து ஒன்றிய அரசு தரப்பிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டு உள்ளனர். மேலும் திருச்சி தனியார் நிறுவனத்திற்கு கனரா வங்கியின் ஏல நடவடிக்கைக்கு தடைவிதித்து வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்கள்.