நடிகை திரிஷா குறித்து சில தினங்களுக்கு முன்பு சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் கிளம்பின.
நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் இந்த சர்ச்சைக்காக எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சங்கம் மன்னிப்பு கேட்கும் படி வலியுறுத்தியது. இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசாரின் சம்மனை ஏற்று ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் மன்சூர் அலிகான் ஆஜரானார். பின்னர் மன்சூர் அலிகான் எனது சக நாயகி த்ரிஷாவே என்னை மன்னித்து விடு என்று மன்னிப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டார்.

பின்னர் மன்சூர் அலிகான் மன்னிப்பை திருஷாவும் ஏற்று; தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது தெய்வத்தன்மை என்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பெரும் பரபரப்பு அடங்கியது. இந்த நிலையில் நடிகை குஷ்பூ, நடிகை திரிஷா, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக நடிகர் மன்சூர் அலிகான் திடீரென்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகை குஷ்பூ, நடிகை திரிஷா, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு, நஷ்ட ஈடு வழக்கு எனது வக்கீல் மூலம் நாளை (இன்று) கோர்ட்டில் தொடுக்க உள்ளேன். மேலும் கடந்த 11ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய கருத்துகள் சரியாக ஒரு வாரம் கழித்து 19ஆம் தேதி சில விஷமிகளால் எடிட் செய்யப்பட்டு, திரிஷாவின் ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டது. மேலும் சில ஆதாரங்களுடன் நாளை (இன்று) வழக்கு தொடுக்க உள்ளேன், என கூறியுள்ளார்.
முடிந்து போனது என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட சர்ச்சை பேச்சு விவாகரத்தில் வழக்கு தொடர போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்து இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.