சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்த ஆலோசனை நடந்தது.
அப்போது நேற்று முன்தினம் 2-வது நாள் கூட்டத்தில், சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது 3-வது நாளாக அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி தொகுதி வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி காலை 9 மணி முதல் மாலை வரை ஆலோசனை நடத்தினார். அதில், பங்கேற்ற நிர்வாகிகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த கூட்டத்திற்கு வரும்போதே மாவட்ட செயலாளர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரிடமும் பேசக்கூடாது என கூறியே அழைத்து வந்திருந்தனர். அதேபோன்று, நிர்வாகிகளையும் பேச அனுமதிக்கவில்லை.
மாவட்ட செயலாளர் அனுமதிக்கும் ஒரு சிலர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டதால் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இந்த கூட்டத்தில் பேசிய பலரும், பாமக, நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி;-

“சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்களே உள்ளது. அதற்கு இப்போதே கட்சியின் நிர்வாகிகள் தயாராக வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து நல்ல முடிவை நானே எடுத்து அறிவிப்பேன்” என்று கூறினார். சிதம்பரம், மதுரை, பெரம்பலூர் தொகுதி நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டம் வருகிற 19 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில், சசிகலா வருகிற 17 ஆம் தேதி தென்காசியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இதை அடுத்து 17 ஆம் தேதி எடப்பாடி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்க இருந்த தென்காசி, தேனி, திண்டுக்கல் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில்;- “சசிகலா தென்காசி வரும் போது அதிமுக நிர்வாகிகள் பலர் அவருக்கு ஆதரவாக செல்ல வாய்ப்புள்ளது. அதனால் எடப்பாடி தலைமையில் சென்னையில் நடக்கும் ஆலோசனையில் பங்கேற்க முடியாது.
இதனால், அதிமுகவில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடிக்கும் அபாயம் உள்ளது. அதனால் தான் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றனர்.