சாலையின் தடுப்பு சுவரில் மோதி குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திருப்பதியில் சாமி தரிசனம் முடித்து சிவகங்கை திரும்பிய பக்தர்கள்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 57). இவர், தனுடைய மனைவி பெரியநாயகி (43), மகள்கள் அபிநயா (29), அனுசுயா (22), உறவினர் சிவசுப்பிரமணியம் (34), அவருடைய மனைவி மகேஸ்வரி (32), மகன் கவி அன்பு ஆகியோருடன் சிவகங்கையில் இருந்து காரில் திருப்பதிக்கு சாமி சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.

தரிசனம் முடித்துவிட்டு நேற்று (15.07.2023) அதிகாலை சிவகங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வேலூர் மாவட்டம், காட்பாடி செங்கோட்டை அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியுள்ளது. இதில் கார் தலைகீழாக கவிழ்ந்து சாலையில் உருண்டுள்ளது. விபத்து சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு கார் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் சிறு சிறு சிராய்ப்பு காயங்களுடன் உயிர்தப்பினர். இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சென்டர் மீடியன் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
சாலையின் நடுவே உள்ள சுவர் மீது கார் மோதி சாலையில் குப்புறக்கவிலும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.