காசா மீது இஸ்ரேல் மிகவும் கொடூரமான தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.கடந்த சனிக்கிழமையன்று திடீரென பாலஸ்தீன ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்தது. இதனால் இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து இன்னும் போர் தொடர்ந்த நிலையில் காணப்படுகிறது.இதன் போது இஸ்ரேல் காசா மீது தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தோராயமாகத்தான் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே இப்படி இருக்க காயமடைந்தவர்கள் என்ணிக்கை எப்படி தெரிய வரும்.இந்த நிலை காசா மீது பொஸ்பரஸ் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டுகள் காணொளி ஆதாரத்துடன் வெளியாகியுள்ளன.

ஆனால், இஸ்ரேல் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது முதல் முறையல்ல இதற்கு முன்பும் கடந்த 2006 ஆம் ஆண்டு லெபனான் போரிலும் அதற்கு பிறகு 2008 மற்றும் 2009 களிலும் இதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும்,2ம் உலகப் போர் பிறகு அமெரிக்கா, ஈராக் மற்றும் ஆப்கான் போர்களின் போதும் இந்த குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் போரின் போதும் ரஷ்யா வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனால் ரஷ்யா அவற்றை மறுத்துள்ளது.
முன்னெச்சரிக்கை எதுவுமின்றி பலஸ்தீன குடிமக்களின் வசிப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி நடவடிக்கையாக பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளது.ஹமாஸ் ஆயுதப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைடா இது தொடர்பாக தெரிவிக்கையில்,

இஸ்ரேலிய கைதிகளை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் இஸ்லாமிய அறிவுறுத்தல்களின்படி செயல்படுவதாகக் கூறினார்.இஸ்ரேலின் தீவிரமான குண்டுவீச்சு மற்றும் பொதுமக்களை எச்சரிக்காமல் அவர்களின் வசிப்பிடங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதாக கூறிய அவர் அதனை நிறுத்தாவிட்டால் இஸ்ரேல் பணயக்கைதிகளை தூக்கிலிடத் தொடங்குவோம் என எச்சரித்துள்ளார்.
இதனிடையே காசா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் இராணுவம் கொண்டு வந்துள்ளது.ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. காசா எல்லையை முற்றிலுமாக இஸ்ரேல் முடக்கியது. உணவு, எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம் போரில் ஈடுபட்டுள்ளதாகவும். அதனால், பேச்சுவார்த்தைக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ உரிய தருணம் இது அல்லவெனவும் தம்முடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.