தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தொடக்கத்தில் மழை சிறிது குறைவாக பெய்தாலும் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 15 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது.

மழை பாதிப்பு மீட்பு களத்தில் சிவ்தாஸ் மீனா இதேபோல் சனிக்கிழமை (நவ. 4) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடியே நேற்று காலை முதல் மாலை வரை தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக ஆலங்குளம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. மாலை நேரங்களிலும் கனமழை பெய்தது. இதனால் பள்ளிக்கூட மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக இன்று 4.11.2023 தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி, நெல்லை, தென்காசி, குமரி திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.