- சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத்துறை மீண்டும் வாதங்களை முன்வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் அமர்வு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், வழக்கில் சில விளக்கங்களை பெறுவதற்காக வழக்கு மீண்டும் பட்டியலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜாபர் சேட் மீதான விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் நடந்துள்ளது என எவ்வாறு முடிவுக்கு வந்தீர்கள் உள்ளிட்ட தொடர்பாக வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, விசாரணையை செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு
ஒத்திவைத்த நீதிபதிகள் அமலாக்கத்துறை வாதம் முடிந்த பின்னர் அன்றைய தினமே உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.