திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100° டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் திடீரென மாலை பொழுதில் கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்றுடன் சுமார் 15 நிமிடத்திற்க்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனால் வெயிலில் வாடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த ஆலங்கட்டி மழையால் சிறிது நேரம் வெப்பம் தணிந்து இதமான சூழலை அனுபவித்தனர்.
இதேபோல வேலூர் மாவட்டம், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் குடியாத்தம் பகுதியில் வெயிலின் தாக்கம் 110 டிகிரியை தாண்டிய நிலையில் கடும் அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனிடையே இன்று மாலை குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் கூடநகரம் கொத்தகுப்பம், பட்டு, செம்பேடு கருணீக சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

மேலும் குடியாத்தம் பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததால் கடும் அனல் காற்றால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.