கூடலூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை வெள்ளத்திலிருந்து தப்பித்த பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆறுகளில் தண்ணீர் குடிக்க வரும் காட்டு யானைகள் ஆற்றை கடந்து மறு பகுதிக்கு செல்கின்றன.

கூடலூர் அருகே உள்ள தர்மகிரி பகுதியில் ஆற்றை கடக்க முயன்ற 3 யானைகள் தண்ணீரில் நடந்து சென்றன. அப்போது ஒரு யானை எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. மற்ற இரு யானைகளும் செய்வதறியாது திகைத்து நின்றது.

சிறிது தூரம் பாறைகளுக்கு மத்தியில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை நீந்தி தத்தளித்து கரையோரம் வந்து தண்ணீரில் இருந்து வெளியேறி கரைக்கு பகுதிக்கு பாதுகாப்பாக சென்ற சம்பவம் சினிமா காட்சிகளை மிஞ்சும் இந்த பரபரப்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.