பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை பொருள் கலாச்சாரம் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி கதறும் மாணவர்களின் பெற்றோர், உரிய நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு காவல்துறை.?
சென்னை மாவட்டம், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராகுல் வயது 19. இவர் சூளைமேட்டில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை மாலை தனது கல்லூரி நண்பர் ஆகாஷின் பிறந்த நாள் விழாவிற்க்கு போறேன், நான் இரவு வரமாட்டேன் என்று கூறி தனது தாய் நாகம்மாளிடம் சொல்லிவிட்டு சென்ற ராகுல், அதற்கு பின்பு அவர் வீட்டிலுள்ள யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவரது நண்பரின் பிறந்த நாளை ஒட்டி, கல்லூரி நண்பர்களான ஆஷிக், சஞ்சய் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் ராயப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஆர்க்கிட் விடுதி என்ற தனியார் ஹோட்டலில் அரை எடுத்து தங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, நண்பரின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட திட்டம் போட்ட அவர்கள் , இரவு முழுவதும், வலி நிவாரணி மாத்திரையை, நசுக்கி பவுடர் செய்து, அதனை தண்ணீரில் கலந்து, சிரிஞ்ச் மூலம் வழியாக நரம்புகளில் ஏற்றி போதையின் உச்சத்தை அடைந்துள்ளனர். மேலும் ஒரு கட்டத்தில், போதை தலைகேறவே ராகுல் ஹோட்டல் அறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன், ராகுலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ராகுல் ஏற்கனவே இறந்து விட்டதாக அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுலின் உறவினர்கள் மற்றும் புளியந்தோப்பு பகுதி பொது மக்கள், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் , தலைநகரான சென்னையில் சர்வ சாதாரணமாக கிடைப்பதாகவும், இது முழுக்க முழுக்க பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்தே விற்கபடுவதாகவும் தெரிவித்தனர். பின்னர், ராகுலின் மரணமே போதை பழக்கத்திற்கு இறுதி மரணமாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட அவரது குடும்பத்தினர். இதனை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக தலையிட்டு , சிறுவர்கள் மற்றும் மாணவர்களை குறி வைத்து விற்கபடும் போதை பொருட்களுக்கு முற்றிலுமாக ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்க ராகுலின் உறவினர்கள் மற்றும் புளியந்தோப்பு பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 19 வயது கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம். தலைநகரான சென்னையை கலங்கடிக்க வைத்துள்ளது.