எம்.ஜி.ஆரை பார்த்து வளர்ந்தார், மக்கள் மனங்களில் நிறைந்தார் – கேப்டன் விஜயகாந்த்..!

6 Min Read
விஜயகாந்த்

சினிமாவில் மட்டுமின்றி தனி மனித வாழ்விலும், ‘வானத்தை போல’ உயர்ந்த ‘கேப்டன்’ விஜயகாந்த், அரசியலில் தனி ராஜ்ஜியம் நடத்தி, வாரி வழங்கியதில், ‘பொன்மனச் செல்வன்’ ஆக திகழ்ந்தார். உடலால் மறைந்தாலும் மக்கள் உள்ளத்தில் என்றும், ‘சொக்கத் தங்கம்’ ஆக இருப்பார்.

- Advertisement -
Ad imageAd image

இவரது இயற்பெயர் விஜயராஜ். 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, அழகர்சாமி – ஆண்டாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தாலும், சிறு வயதிலேயே மதுரைக்கு வந்து விட்டது, அவரது குடும்பம். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த விஜயகாந்த், சிறு வயது முதலே எம்.ஜி.ஆர்., படங்களால் அதிகமாக ஈர்க்கப்பட்டார். அவரை போலவே நடித்தும், பேசியும் நண்பர்களை மகிழ்விப்பார். அந்த ஆர்வமே அவரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. சினிமாவே, இவருக்கான நண்பர்கள் வட்டாரத்தையும் பெருக்கியது. படிப்பில் கவனம் செலுத்தாததால், கீரைத்துறையில் உள்ள அரிசி ஆலையை கவனிக்கச் சொல்லி, அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர். விஜயகாந்த் தன் நண்பர்களுடன் கூடும் இடம் அருகே, மதுரை மாவட்டத்தில் படங்களை வெளியிடும் சேனாஸ் நிறுவனம் இருந்தது. இப்பட நிறுவனம் வெளியிட்ட ஆட்டுக்கார அலமேலு படத்த்திற்காக, ஆட்டுடன் விளம்பரம் தேடிக் கொடுத்தது, விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்களே. இறுதியில் சினிமா தான் தனக்கு சரிவரும் என நினைத்த விஜயகாந்த், சென்னை வந்து இயக்குனர் பி.மாதவனை சந்தித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த்

விஜயகாந்தை பார்த்த மாத்திரத்திலேயே, ரஜினி போல் தோற்றம் இருந்ததால், ரஜினிக்கு தம்பியாக நடிக்க வைக்கலாம் என இயக்குனர் திட்டமிட்டுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் தங்கியவாறு, பல கம்பெனிகளுக்கு விஜயகாந்த் ஏறி இறங்கியுள்ளார். சுதாகர், ராதிகா நடிப்பில், இனிக்கும் இளமை படத்தை எம்.ஏ.காஜா இயக்கினார். இப்படத்தில் விஜயகாந்த் வில்லனாக நடித்தார். அவர் தான் விஜயராஜ் என்ற பெயரை, விஜயகாந்த் என மாற்றினார். கடந்த 1979ல் எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான இனிக்கும் இளமை படமே விஜயகாந்தின் முதல் படம். அதன்பின், சில படங்களில் நடித்தாலும், விஜயன் இயக்கத்தில் மீனவராக நடித்த துாரத்து இடிமுழக்கம் படம் தேசிய விருது வென்றது. இப்படத்தில் விஜயகாந்த் மீனவராக நடித்தார். இப்படம் மூலம் விஜயகாந்த் பெயர் பிரபலமானது. ரஜினி – கமல் இரு துருவங்கள் கோலோச்சிய வேளையில், விஜயகாந்த் என்ற கருப்பு நிலா உதயமானது. நாயகனாக மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருந்த விஜயகாந்த், பல வாய்ப்புகளை உதறினார். முரட்டுக்காளை படத்திலும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. முதலில் அதில் நடிக்க மறுத்த அவர், நண்பர்கள் வறுமையில் இருப்பதை பார்த்து, அதில் நடிக்க சம்மதித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இறுதியில், ராவுத்தர் உள்ளிட்டோரின் வற்புறுத்தலால், அம்முடிவை கைவிட்டார். அதன்பின், ஆர்.செல்வராஜின், அகல் விளக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிகரமான படம் என்றால், அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய, சட்டம் ஒரு இருட்டறை தான். சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு, முதலில் பிரபுவிடம் கதை சொன்னபோது தயங்கியுள்ளார். இதனால் புதுமுகங்களை தேடினர். இறுதியில் விஜய்காந்தின் அந்த அனல் வீசும் ஒளி பொருந்திய கண்களே, அவருக்கு அப்பட வாய்ப்பை பெற்று தந்தது. சட்டம் ஒரு இருட்டறை படம், தமிழில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பிலும், ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பிலும் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், ஊமை விழிகள், கூலிக்காரன், உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன், செந்துாரப்பூவே, புலன் விசாரணை, சின்ன கவுண்டர், வானத்தைப் போல, ரமணா என, பல வெற்றிப் படங்கள், விஜயகாந்தின் மகுடத்தை அலங்கரித்து உள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

பல நடிகர்களுக்கு நுாறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் நுாறு நாள் கடந்தும் வெற்றிகரமாக ஓடி வசூலில் பெரும் சாதனை படைத்தது. கேப்டன் பிரபாகரன் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அன்று முதல் விஜயகாந்த், ‘கேப்டன்’ என்று அழைக்கப்பட்டார். கடந்த 1984ல், ஒரே ஆண்டில், வைதேகி காத்திருந்தாள் படம் உட்பட, 18 படங்களில் நடித்து, தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைத்தார். தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது, செந்துாரப்பூவே படத்திற்காக பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்., விருது, கலைமாமணி விருது உட்பட, பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். பின், 1999ல் நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த். 2004 வரை அப்பொறுப்பில் இருந்தார். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த சங்கக் கடனை, சிங்கப்பூர், மலேஷியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில், நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டினார்; கடனை அடைத்து சங்க கட்டடத்தையும் மீட்டார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

நலிந்த கலைஞர்களுக்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்ததார். 1990ல் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2002ல் காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து, ‘நீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் இல்லை’ என்ற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை, நெய்வேலியில் அதிரடியாக நடத்தினார்.சினிமாவில் 40 ஆண்டுகளில், 156 படங்களில் நடித்தார். கடைசியாக அவரது மகன் சண்முகபாண்டியன் உடன், 2015ல் சகாப்தம் படத்தில் நடித்தார். மதுரையில் 2005ல் செப்., 14ல் தே.மு.தி.க., கட்சியை துவக்கினார். ‘மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி’ என அறிவித்தார். சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் எம்.ஜி.ஆர்., பாணியை பின்பற்றினார். பின், 2006 சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று, முதல் முறையாக சட்டசபையில் காலடி எடுத்து வைத்தார்.

கேப்டன் விஜயகாந்த்

அந்த தேர்தலில், அவர் கட்சி பெற்ற ஓட்டு சதவீதம் 8.38. தொடர்ந்து, 2009ல் லோக்சபா தேர்தலில் தனித்தே போட்டியிட்டார். அப்போது பெற்ற ஓட்டு 10.8 சதவீதம். பின், 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து, 41 தொகுதியில் போட்டியிட்டு, 29ல் வென்றார். ரிஷிவந்தியம் தொகுதியில் வென்ற விஜயகாந்த், சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். அப்போது தான் சட்டசபையில், அ.தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க.,வுக்கும் மோதல் வெடித்தது. நாக்கை கடித்து தன் வழக்கமான ஸ்டைலில் எதிர்ப்பு தெரிவித்து பேசினார் விஜயகாந்த். அதன்பின், அவரது கட்சிக்கு தேய்பிறை ஆரம்பமானது. விஜயகாந்த் கடைசியாக, 2023 டிச., 14ல் தே.மு.தி.க., பொதுக்குழுவில் பங்கேற்றார். அன்றைய தினம் அவரது மனைவி பிரேமலதா, கட்சியின் பொதுச் செயலர் பொறுப்பை ஏற்றார்.

கேப்டன் விஜயகாந்த்

இலங்கை தமிழர் பிரச்னைக்காக குரல் கொடுத்த விஜயகாந்த் தன் பிறந்த நாளை தவிர்த்து, அன்றைய தினத்தை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்தார். தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். திரைப்பட கல்லுாரி மாணவர்களுக்காக, ஊமை விழிகள், உழவன் மகன், பூந்தோட்டக் காவல்காரன், செந்துாரப்பூவே, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், பரதன் படங்களில் நடித்து, ஆபாவாணன், அரவிந்த்ராஜ், செந்தில்நாதன், தேவராஜ், செல்வமணி, சபா உள்ளிட்ட இயக்குனர் ஆக்கினார். தமிழ் சினிமாவில் விஜயை, ‘ஆக் ஷன்’ நாயகனாக உயர்த்தியவர் விஜயகாந்த். செந்துாரப்பாண்டி படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். அப்படத்தில் விஜய் நாயகனாக நடித்தார்.

Share This Article
Leave a review