குஜராத்தில் தாஹோட் நகரில் இருந்து ராகுலின் இரண்டாவது நாள் நீதி யாத்திரை நேற்று தொடங்கியது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரை நடந்து வருகின்றது.
இதனால் நேற்று முன்தினம் ராஜஸ்தானில் இருந்து குஜராத்திற்குள் யாத்திரை நுழைந்தது. ஜலோட் நகரில் பொதுமக்களிடையே ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது இரண்டாவது நாளான நேற்று தஹோட் நகரில் இருந்து யாத்திரை தொடங்கியது.

அப்போது வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கோத்ரா ரயில் நிலையத்திற்கு எதிரே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது;-
மோடி அரசு அறிவித்த ஸ்டார்ட் அப்களை நீங்கள் பார்த்தீர்களா? அவை எங்கும் காணப்படுகின்றனவா? ஒன்று கூட இல்லை. இருப்பவை வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

மேலும் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் மகன்கள் தொழில் தொடங்க ரூ. 5000 கோடி நிதியை உருவாக்குவோம். மேலும், 30 லட்சம் அரசு பதவிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிரப்பப்படும்.
தற்போது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதேநிவாரணம் வழங்க மோடி விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று காலையில், பழங்குடியினரின் கோவிந்த் குருவுக்கு அஞ்சலி செலுத்த ஜலோட் நகருக்கு அருகில் உள்ள கம்போய் தாமுக்கு சென்றார். மேலும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு வழங்கிய பெரிய கேக்கையும் அவர் வெட்டினார்.

கோத்ரா செல்லும் வழியில், மகாசிவராத்திரியை முன்னிட்டு ஒரு சிவன் கோவிலில் காந்தி பிரார்த்தனை செய்தார். பின்னர் பஞ்சமஹாலில் உள்ள ஜம்புகோடா கிராமத்தில் இரவு தங்கினார்.