போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே. வாசன்

2 Min Read

போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி வேலை நிறுத்த போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி, வாரிசு பணி நியமனங்கள் தாமதமின்றி வழங்குதல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தியதை அரசு ஏற்காததால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தமிழக அரசும், போக்குவரத்து நிர்வாகமும் எவ்வித உறுதியையும் அளித்திடாத நிலையில் அனைத்து தொழிற்சங்கங்களும் வருகிற 09.01.2024 முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள். மேலும் கோரிக்கைகளில் ஓய்வுதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுகளை வழங்கிட பொங்கல் பண்டிகைக்கு முன்னரே அறிவிக்கையை அரசு அறிவித்தால் வேலை நிறுத்தத்தை தவிர்த்திடவும் தொழிற்சங்கள் முன்வந்துள்ளது.அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலை நிறுத்த நடவடிக்கையை தவிர்த்து பண்டிகை கால போக்குவரத்து சேவை பாதிக்காமல், அரசு தனிக் கவனம் செலுத்திட வேண்டும்.

ஜி.கே.வாசன்

தொடர் நஷ்டத்தில் இயங்கிவரும் அரசு போக்குவரத்து சேவை நிறுவனத்திற்கு இழப்பை ஈடுசெய்கிற வகையில் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்த நவம்பர் 2022 முதல் அகவிலைப்படி உயர்வுகள் அளித்திடவும், ஓய்வு பெற்று 14 மாதங்களாகியும் பணப் பலன்கள் வழங்கப்படாமல் இருப்பதை உடனடியாக வழங்கிடவும், 2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு கழக பென்ஷன் திட்டம் அமுல் படுத்தவும், காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்பவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசும், போக்குவரத்து நிறுவனம் எடுக்க வேண்டும்.

எனவே தமிழக அரசும் போக்குவரத்து நிர்வாகமும் பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்திடும் வகையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review