சென்னையில் கவர்னர் ஆர்.என் ரவியும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் இன்று ஒரே விமானத்தில் கோவை புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் இருவரும் நேரில் சந்தித்து பேசுவார்களா? என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திங்கட்கிழமை காலை 8:20 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு செல்கிறார். கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு, அங்கிருந்து மாலை 3:20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அதனை தொடர்ந்து, டெல்லி நாளை செவ்வாய்க்கிழமை நடக்கும் இந்திய கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் முதலமைச்சர் நாளை இரவு 8:50 மணிக்கு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, இரவு 11:30 மணிக்கு சென்னை வந்து அடைக்கிறார்.

இந்த நிலையில் நாமக்கல்லில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவியும் இன்று காலை 8:30 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செல்லக்கூடிய அதே விமானத்தில் கோவை புறப்பட்டு செல்கிறார். கவர்னர் ஆர்.என் ரவி தனது நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலை 4:15 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவையில் இருந்து புறப்பட்டு, மாலை 5:15 மணிக்கு சென்னை வந்து சேர்கிறார். மேலும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு விட்டு பின்னர், திரும்பி அனுப்பியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் முதலமைச்சரை நேரில் அழைத்து கவர்னர் பேச வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தியது. இதனையடுத்து மு.க ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என் ரவி அழைப்பு விடுத்தார். ஆனால் புயல் நிவாரண பணிகளை கவனிக்க வேண்டியது இருப்பதால் அவை முடிந்த பிறகு, பேச்சுவார்த்தைக்கு வருவதாக முதலமைச்சர் பதில் அளித்தார்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக நேரில் சந்திக்காமல் இருந்து வரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினும், கவர்னரும் இன்று ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளதால் நேரில் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சந்தித்து பேசி அருகருகே உள்ள இருக்கையில் அமர்வார்களா? அல்லது இருவரும் பரஸ்பரம் வணக்கம் மட்டும் சொல்லிக்கொண்டு, தனித்தனி இருக்கைகளில் அமர்வார்களா? என்பது தெரியவில்லை. அவர்களுக்கு விமானத்தில் இருக்கை ஒதுக்கீடு எவ்வாறு அமையும் என்பதும் இன்று தான் தெரியவரும் என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.