லக்னோ அணியின் வெற்றிக்கு பின் மைதானத்திற்கு வந்த அந்த அணியின் மென்டார் கவுதம் கம்பீர், சின்னசாமி மைதானத்தில் இருந்த ரசிகர்களை பார்த்து, தனது விரலை வாயில் வைத்து சைலன்ஸ் என்று சிக்னல் காட்டியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
16வது சீசனுக்கான 15வது லீக் போட்டியில் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி மோதியது. முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி அணியில் விராட் கோலி 61, டூ பிளஸிஸ் 79 மற்றும் மேக்ஸ்வெல் 59 ரன்கன் அடித்து அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெரிய இலக்கை விரட்டிய லக்னோ அணி ஸ்டாய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் அதிரடியால் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 62 ரன்களும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 65 ரன்களும் சேர்த்து அசத்தினர். கடைசி பந்தில் மன்கட் முறையில் விக்கெட் வீழ்த்த நினைத்தும், ஆர்சிபி அணியால் அதனை சரியாக செய்ய முடியவில்லை. அதேபோல் தினேஷ் கார்த்திக்கும் பந்தை பிடிக்காமல் தவறவிட்டார்.

இதனைத் தொடர்ந்து லக்னோ வீரர்கள் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணி விக்கெட் வீழ்த்தியது போல் ஆர்சிபி.. ஆர்சிபி.. என்று ரசிகர்கள் உற்சாகம் குரல் எழுப்பினர். ரசிகர்களின் இந்தக் குரல் கடைசி ஓவரில் ஒவ்வொரு பந்துக்கும் உயர்ந்து கொண்டே சென்றது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆர்சிபி அணியின் பெயரை சொல்லி, தங்களின் அணிக்கு ஆதரவளித்தனர்.
ரசிகர்களின் இந்த குரல் லக்னோ அணியின் மென்டார் கவுதம் கம்பீரை சோதித்துள்ளது. லக்னோ அணியின் வெற்றிக்கு பின், மைதானத்திற்கு வந்த கவுதம் கம்பீர் தனது ஒற்றை விரலை வாயில் வைத்து சைலன்ஸ் என்று சொல்வது போல் சிக்னல் காட்டினார்.
கவுதம் கம்பீரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரர்கள் தான் எப்போதும் ஆக்ரோஷமான கொண்டாடுவார்கள். ஆனால் பயிற்சியாளர் நிலையில் இருக்கும் கம்பீர், இப்படி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.