முன்னாள் அமைச்சர் பொன்முடி மகனுக்கு சீட்டு இல்லை என அரசு நிகழ்ச்சியில் பேசிய திமுக மாவட்ட செயலாளரால் பரபரப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஆலூர் ஊராட்சியில், அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாவினை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்விற்கு, திருக்கோவிலூர் பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ;-

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பொன்.கௌதம சிகாமணி கடந்த தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனவும், தற்பொழுது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவரை விட சிறந்த வேட்பாளரை தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.
அதேபோன்று, கடந்த முறை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டும் கீழ்பாடி பகுதியில் அரசு கால்நடை மருத்துவர் ஆடுகளை வழங்கினார். இதற்கு நான் அவரை மிரட்டினேன் என கூறுகின்றனர். ஆனால் நான் மிரட்டினால் வேறு மாதிரி இருக்கும் என பேசினார்.

அதேபோன்று, கடந்த முறை தகடி என்னும் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பலமுறை அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அகற்றாததால், நானே கடைக்கு சென்று பூட்டு போட்டேன்.
அப்போது திருக்கோவிலூர் காவல் ஆய்வாளராக இருந்த செல்வம் என்பவர் அதிமுக நிர்வாகி போல் நடந்து கொண்டதாக பேசினார்.

மேலும், பேசிய எம்எல்ஏ கடந்த 10 ஆண்டுகளில் இந்த தொகுதி பெற்ற வளர்ச்சியை விட திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 2½ ஆண்டுகளில் 200 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் பேசினார்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒருவர் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வருவாய் வட்டாட்சியரிடம் கேட்ட போது அவர் ஒருமையில் பேசியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அரசியல் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.