புதுடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி மீண்டும் பொன்முடிக்கே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது .
2006 – 2011 திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் கனிம வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த பொன்முடி, அந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 76 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை 2016ஆம் ஆண்டு விடுவித்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக இவ்வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது உறுதியாகி இருப்பதாக கூறி, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பினை ரத்து செய்தார். அத்துடன், பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை இழந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். அத்துடன், சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பினை அடுத்து காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி மீண்டும் பொன்முடிக்கே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .