சென்னையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று சென்னை, பெரியமேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவு செய்தவுடன் வில்லங்கச் சான்று விவரங்களை சிறிய URL மூலம் ஆவணதாரருக்கு அனுப்பும் வசதியை தொடங்கி வைத்தார்.

பத்திரப்பதிவு அலுவலகத்துக்கே போகாமல், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக வில்லங்க சான்றிதழை பெறுவது எப்படி தெரியுமா? அதற்கான வழிகள் என்னென்ன தெரியுமா? பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புபவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றினை பெறுவார்கள்.

அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு சொத்தை வாங்க விரும்புவர்கள், அந்தச் சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா, சொத்தை விற்பவர் பெயரில் தான் அந்தச் சொத்து உள்ளதா என்பதை அறிவதற்காகச் சொத்து விவரத்தைத் தெரிவித்து வில்லங்கச் சான்றிதழை பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி பெற வேண்டும்.
தற்போது பத்திரப்பதிவு முடிவடைந்தவுடன் பொதுமக்கள் பதிவுத்துறையின் இணையதளத்தில் சென்று எந்த விதமான கட்டணமுமின்றி வில்லங்கசான்று விபரங்களை தரவிறக்கம் செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.

இணையதளத்தில் சென்று வில்லங்கச்சான்று விபரங்களை பார்வையிடும் வசதியை மேலும் எளிதாக்கும் வண்ணம், ஒரு பத்திரப்பதிவு நிறைவடைந்த மறுநாள் சொத்து உரிமையாளரின் கைபேசிக்கு ஆவணத்தை பொறுத்த தற்போதைய வில்லங்கச் சான்று விபரங்களை எவ்வித கட்டணமுமின்றி சிறிய URL ஆக குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி மூலம், பத்திரப்பதிவு நிறைவடைந்த மறுநாள், Tiny URL உடன் கூடிய குறுஞ்செய்தி பொதுமக்களின் கைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்கப்படும். அதை கிளிக் செய்த பின்னர் ஆவணத்தைப் பொறுத்த வில்லங்கச் சான்றினை பிடிஎப் வடிவில் கைபேசியிலேயே தரவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளலாம்.
இவ்வாறான வில்லங்கங்சான்று விபரங்கள் 30 நாட்கள் வரையில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வண்ணம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.