போலீஸ் எனக்கூறி 25 லட்சம் பணம் பறிப்பு.! பட்டபகலில் ஓசூரி …

2 Min Read
சிசிடிவி காட்சி

போலீஸ் எனக்கூறி ஆட்டு வியாபாரியை காரில் கடத்தி 25 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள். சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் புலியனேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (47). இவர் ஆட்டு வியாபாரி. மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆடுகளை மொத்தமாக கொள்முதல் செய்யும் இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வாரச்சந்தைகள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆடுகளை சில்லறை விலைக்கு விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஆடு வியாபாரம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி அடுத்துள்ள காவேரிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடுகளை விற்ற 13 நபர்களிடம் சுமார் 25 லட்ச ரூபாயை இவர் வசூல் செய்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் ஓசூர் பத்தலப்பள்ளி என்ற இடத்திற்கு வந்த சரவணன பத்தலப்பள்ளியில் ஆடுகளை விற்றவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்தப்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத வெள்ளை நிற மாருதி காரில் வந்த 4 பேர் சரவணனை மடக்கி பிடித்து தாங்கள் போலீசார் எனக்கூறி கஞ்சா விற்பனை செய்கிறாயா? உன்னிடம் விசாரிக்க வேண்டும்? என குண்டு கட்டாக காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.

இதனையடுத்து சரவணன் வைத்திருந்த பையில் இருந்த 25 லட்ச ரூபாய் ரொக்க பணத்தை பறித்து கொண்ட அந்த கும்பல் அவரை உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் என்ற கிராமத்தில் இறக்கி விட்டு காரில் தப்பி சென்றுள்ளனர். அப்போதுதான் தன்னை போலீசார் அழைத்து செல்லவில்லை, மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர் என சரவணனுக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்து ஓசூர் வந்த சரவணன் இந்த கடத்தல் மற்றும் பணம் பறிப்பு சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி சரவணனை கடத்தி பணம் பறித்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் பகுதியில் பட்டப்பகலில் ஆட்டு வியாபாரியை போலீசார் எனக்கூறி மர்ம நபர்கள் குண்டுகட்டாக காரில் கடத்தி 25 லட்ச ரூபாய் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review