அடுத்த கொடூரம்., தலித் வாலிபர் அடித்துக் கொலை.! தாயை நிர்வாணமாக்கி சித்திரவதை.!

0
90
சித்திரவதை

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம்சிங். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தலித் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் விக்ரம்சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த விக்ரம்சிங் தனக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறும்படி தலித் பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டி வந்துள்ளார். ஆனால் அவர்கள் வழக்கை வாபஸ் பெற மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த விக்ரம்சிங் தனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து தலித் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு அந்த பெண் தனது தாயாருடன் இருந்துள்ளார். அப்போது வழக்கை வாபஸ் பெற மிரட்டிய கும்பல், அந்த பெண்ணின் வீட்டில் இருந்து பொருட்களையும், மேற்கூரையும் அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரான 20 வயது வாலிபர் அங்கு வந்துள்ளார். அவரிடமும் வழக்கை வாபஸ் பெறுமாறு கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது. ஆனால் அந்த வாலிபர் மறுப்பு தெரிவிக்கவே அவரையும் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். இதைப்பார்த்த வாலிபரின் தாயார் கும்பலிடம் இருந்து தனது மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்திய கும்பல் அவரையும், அவரது மகனையும் கொடூரமாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயமடைந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அதற்குள் அவர் இறந்து விட்டார். கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த அவரது தாய்க்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விக்ரம்சிங் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை, பாலியல் தொல்லை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் உய்கே தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதட்டம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த சம்பவத்திற்கு ஆளும் பாரதிய ஜனதா அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், மத்திய பிரதேசத்தில் தலித் மக்கள், பழங்குடியின மக்கள் மீது ஒடுக்கு முறை தடையின்றி தொடர்கிறது. தலித்களுக்கு எதிரான குற்றங்கள் விகிதத்தில் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது என தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் பூபேந்திரசிங் மறுத்துள்ளார். தகராறு காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், இதனை காங்கிரஸ் அரசியலாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here