திருச்சியில், ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பாமக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மங்கம்மா நகரை சேர்ந்தவர் பிரபு என்கிற ஆம்புலன்ஸ் பிரபு வயது 51. இவரது மனைவி உமா மகேஸ்வரி வயது 48. இவர்கள் புத்தூர் ஆபீஸசர்ஸ் காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த பிரபு அரசு மருத்துவமனை எதிரே ஸ்ரீ தாயார் ஹோம் கேர் சர்வீஸ் என்ற பெயரில் வீடுகளுக்கு மருத்துவ சேவைக்கு நர்சுகள் அனுப்பி வைக்கும் நிறுவனம் மற்றும் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் கார் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் கார் வாங்கி விற்றது தொடர்பான மோசடி வழக்கில் நேற்று முன்தினம் இரவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பிரபு கையெழுத்து போட்டு விட்டு தனது அலுவலகத்துக்கு வந்து உட்கார்ந்து இருந்தார். அப்போது இரவு 10 மணி அளவில் மாஸ்க் அணிந்தபடி அலுவலகத்துக்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் பிரபுவே சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை சிதைக்கப்பட்டு பிரபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் மூன்று பேரும் அங்கிருந்து சாவகாசமாக வெளியே சென்றனர். பிரபு கடை முன் இருந்த கேமராவில் பதிவாகி இருந்த இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆனது. தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்ட சோதனைக்கு விடப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் திடீர் நகரை சேர்ந்த ரியாஸ் ராஜேஷ் வயது 24, பஷீர் வயது 29 தஞ்சாவூர் மகா தேவபுரம் ராஜேஷ் பைலட் வயது 30 ஆகிய நான்கு பேரை நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் திருவேறும்போரில் பதுங்கி இருந்தபோது கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது பற்றி போலீசார் கூறுகையில்; கடந்த சில தினங்களுக்கு முன் அடிதடி வழக்கு ஒன்றில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பிரபு பின்னர் ஜாமினில் வந்தார். பாமக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அணி முன்னால் செயலாளராக இருந்தவர் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கொலையான பிரபு ரவுடி பட்டியலில் (சி) பிரிவில் உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி தொழிலதிபரும் அமைச்சர் நேருவின் சகோதரருமான ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு போலீசார் கடந்த 9-ம் தேதி பிரபுவிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணைக்கு நாளை இன்று நேரில் ஆஜராக வேண்டும் என போலீசார் உத்தரவிட்டு இருந்த நிலையில் பிரபு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் கைதான நபர்களில் லட்சுமணன் என்பவர் பிரபுவிடம் டிரைவராக வேலை பார்த்து உள்ளார். தொடர்ந்து வழக்கு ஒன்றில் அவர் சிறை சென்றபோது அவரது மனைவியிடம் பிரபு தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. தொழில் போட்டி காரணமாக பிரபுவுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள அப்பு என்கின்ற ஹரிகிருஷ்ணனுக்கும் கொலையான பிரபுவுக்கும் இடையே தொழில் போட்டி இருந்ததாக கூறப்படுகிறது. தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.