கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் பணியமர்ந்த பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த நிலையில் வழக்கில் இருந்து ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் கடந்த 19ஆம் தேதி தள்ளுபடி செய்தார். இதனை அடுத்து மேற்கண்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, ராம் சங்கர், தற்போது அவருக்கு இருக்கும் இதய குழாய் அடைப்புக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால் அவருக்கு ஆபத்தாக முடியும்.

குறிப்பாக பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே மருத்துவ காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் அதற்கு அமலாக்க துறையின் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷால் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை அடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பைபாஸ் சிகிச்சை என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சாதரணமாக ஆகிவிட்டது. மேலும் இதனை நாங்கள் கூகுளில் பார்த்து விவரமாக தெரிந்து கொண்டோம். அதனால் இந்த விவாகரத்தில் மருத்துவ ரீதியிலான ஜாமீன் வழங்கும் எந்த முகத்திரமும் கிடையாது என தெரிவித்தனர்.

இதனை அடுத்து அப்போது குறிப்பிட்ட செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதை அடுத்து மனுவை தள்ளுபடி செய்ததோடு அதனை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்க நீதிபதிகள், செந்தில் பாலாஜி தரப்பில் கீழமை நீதிமன்றத்திற்கு சென்று வழக்கமான ஜாமீன் மனுவை அங்கு தாக்கல் செய்யலாம் என்றும், அதனை தகுதியின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்றும் உத்தரவிட்டு, செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.