விழுப்புரம் மாவட்டம், அடுத்த மேல்மலையனூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் மகன் ராஜேஷ் வயது (31). இவர் இன்ஜினியரிங் முடித்து விட்டு மாலத்தீவில் ரிசார்ட்டில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் புவனேஸ்வரி வயது (29) என்பவருக்கும் ராஜேஷுக்கும் கடந்த மாதம் 26 ஆம் தேதி திருமண நிச்சயம் விளாப்பாக்கத்தில் நடைபெற்று உள்ளது.

வருகிற ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி மேல்மலையனூரில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்துக்கு ஒரு மாதம் இருப்பதால் ராஜேஷ் மாலத்தீவுக்கு சென்று விடுமுறை எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளார். அப்போது நிச்சயத்துக்கு பின் புவனேஸ்வரி ராஜேஷிடம் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் ராஜேஷிடம், புவனேஸ்வரி கடந்த 14 ஆம் தேதி இரவு செல்போனில் தொடர்பு கொண்டு தான் அதே ஊரை சேர்ந்த வேறு ஒரு நபரை காதலிப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறி விட்டு இணைப்பை துண்டித்து உள்ளார்.

இதனால் மனமுடைந்து மாலத்தீவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று மரத்தில் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாலத்தீவு போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது நேற்று சொந்த ஊரான மேல்மலையனூருக்கு ராஜேஷின் உடல் கொண்டு வரப்பட்டு உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.