சென்னை தேனாம்பேட்டையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீட்டில் 2ஆவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். இவர் கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடி மாவட்ட, மாநில அளவில் நிறைய போட்டிகளில் வென்றுள்ளார்.
முன்னாள் கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுன் தற்போது தமிழக கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். மார்ட்டினின் மகள் டெய்சியை ஆதவ் திருமணம் செய்துள்ளார்.லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற போதெல்லாம் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஆதவ் அர்ஜுனின் வீடு, அலுவலகங்களிலும் நேற்று அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. ஆதவ் தற்போது விசிக துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வவந்தனர். இந்த நிலையில் இன்று 2ஆவது நாளாக ஆதவ் அர்ஜுன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அது போல் சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நிறைவடைந்தது.
பின்னணி என்ன: திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் என்ற மாநாடு அண்மையில் நடந்தது. இந்த மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளம் வெளியிடப்பட்டது. இந்த இணையதளத்தை வடிவமைத்துக் கொடுத்தது ஆதவ் அர்ஜுன் தலைமையிலான வாய்ஸ் ஆஃப் காமன் குழுவினர்.
வாய்ஸ் ஆப் காமன் நிறுவனர் ஆதவ்வும் தன்னை ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தளம் மூலமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார். அந்த மாநாட்டின் மேடையிலேயே ஆதவ் அர்ஜுனை மேடையேற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் பாராட்டினார்.விசிகவின் பல்வேறு நிகழ்வுகளை ஆதவ்தான் ஒருங்கிணைத்தார் என்றும் இந்த வெல்லும் சனநாயகம் மாநாட்டை ஒருங்கிணைத்ததும் அவர்தான் என திருமாவளவன் பேசினார். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 15ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஆதவ் அர்ஜுனுக்கு துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: வாய்ஸ் ஆப் காமன் (voice of common) என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜுன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா, அக்கட்சியின் பூத் ஏஜெண்டுகள் கூட்டம் ஆகியவற்றை ஆதவ்வின் நிறுவனம்தான் ஏற்பாடுகளை செய்திருந்தது.
திருச்சியில் லட்சக்கணக்கானோர் திரண்ட விசிக மாநாட்டையும் ஆதவ் அர்ஜுன் தான் ஒருங்கிணைத்தார். இந்த மாநாடு, இதன் சிறப்பான ஏற்பாடுகளால் தனிக் கவனம் பெற்றது. இந்நிலையில் தான் அவரை, விசிகவின் துணை பொதுச் செயலாளராக நியமித்துள்ளார் திருமாவளவன். இவருடைய வீட்டில் தற்போது அமலாக்கத் துறை 2ஆவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது. இவருக்கு விசிகவில் துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.