வாக்குப்பதிவு நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்து, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி தலைவர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று சென்னையில் அனைத்துக்கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் கூறிய கருத்துகள் பின்வருமாறு;-மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் போது 100 சதவீதம் ஒப்புகைசீட்டு வேண்டும் என்று உறுதியாக கூறி இருக்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம்தான் வாக்காளர் அடையாள அட்டை வழங்குகிறது.
எனவே, பெயர் இருந்தாலும், இல்லையென்றாலும் வாக்காளர் அட்டை இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளும் முக்கியமாக இருப்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து பூத்களிலும் சிசிடிவி கேமரா, கவுண்டிங் மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நிறைய சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளோம். அதனால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிற மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என விவிபேட் ஒப்புகை சீட்டை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும்.

தேர்தல் வெளிப்படைத்தன்மையோடு நடக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இழக்க செய்து விட்டது. அதுபோல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலும் இருந்துவிடக்கூடாது. ஒரே நாடு ஒரே தேர்தலை நாங்கள் எதிர்க்கிறோம்.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

இந்த பணியை விரைவில் முடிக்க வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபேட் மூலம் ஒப்புகைசீட்டு வழங்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் நடைமுறையை மாற்றி, முன்புபோல் வாக்குச்சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
வெறுப்பு அரசியல் முறையை தடுக்க வேண்டும். தேர்தல் கமிஷன் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். ஓட்டு போட்டதும், அவர்களது செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் முறையை கொண்டுவர வேண்டும்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கேமரா பொருத்தப்பட வேண்டும். 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவாகும் மையங்களுக்கு முக்கியத்துவம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விவிபேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை ஒப்பிட்டு பார்த்து முடிவுகளை அறிவிக்க வேண்டும். 500 மீட்டருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.