தலையங்கம்…
ஏன் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க வேண்டும்? மக்கள் வரிப்பணத்தில் இப்படி ஒரு அமைச்சருக்கு ஊதியம் வழங்க வேண்டிய அவசியம் என்ன? எல்லோரும் மனதிலும் ஏற்படுகிற சாதாரண கேள்விதான் இது. ஏன் தமிழக அரசும் முதல்வரும் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சாதாரண மக்கள் தினந்தோறும் பேசிக் கொண்டிருக்கிற ஒரு பேசுபொருளாக மாறிவிட்டார் செந்தில் பாலாஜி.
இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு நபர் தொடர்ந்து இலாக்காக்கள் இல்லாத ஒரு அமைச்சராக இருக்க வேண்டுமா? என்கிற கேள்விதான் நம் முன்னால் கூட எழுகிறது.
உடல்நிலை மோசமான நிலையில் மக்கள் பணி செய்வதை கூட தவிர்த்து விட்டு உடல் நலனில் அக்கறை செலுத்துவது தான் எதார்த்தம். தமிழக அரசும், தமிழக முதல்வரும் அமைச்சர் பதவியில் இருந்து அவரை விடுவிக்காவிட்டாலும் கூட செந்தில் பாலாஜியோ அல்லது அவரது குடும்பத்தினரோ ஆலோசனை செய்து செந்தில் பாலாஜி தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவே இயங்காமல் மருத்துவர் கண்காணிப்பில் ஓய்வெடுப்பது தான் சரி.
மூன்று ரத்தக்குழாய்களில் 80 சதவீதத்திற்கு மேல் அடைப்பு ஏற்பட்ட ஒரு நபரால் எப்படி மக்கள் பணி செய்ய முடியும் என்பது நம்முடைய கேள்வி அவரை வற்புறுத்தி முதல்வரும் அமைச்சர்களும் அமைச்சரவையில் இடம்பெற செய்கிறார்களோ என்கிற அய்யம் எல்லோரையும் போல நமக்கும் எழுகிறது. மடியில் கனமில்லையேல் வழியில் எதற்கு பயம் என்று சொல்லுவார்களே அப்படித்தான் பார்க்க வேண்டும் இந்த அரசியலையும். ஆனால் திமுக அரசு அப்படி பார்க்கவில்லை மடியில் ஏதோ பெருத்த கனத்தை வைத்துக்கொண்டு வழியில் பயமில்லாதது போல காட்டிக் கொள்வதாகவே தெரிகிறது.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குகிற அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்பது கூட தெரியாத ஒரு கவர்னர் தமிழகத்தில் இருக்கிறார் என்று பார்க்க வேண்டி இருக்கிறது. கவர்னர் பணி என்ன என்று சொன்னால் கண்காணிப்பணி தான். என்ன நடக்கிறது எப்படி நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான் கவர்னர் பணி. கவர்னருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதனை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
கவர்னர் அந்தந்த மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் கிடையாது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக கவர்னரை இயக்குவது எதுவென்று சொன்னால் பிஜேபி, ஆர் எஸ் எஸ் தான் .இதை இல்லை என கவர்னர் மறுக்க முடியாது பிஜேபி ஆர்எஸ்எஸும் மறுக்க முடியாது ஏனென்றால் கவர்னரின் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது. எனவே கவர்னர் அவரது அதிகாரத்துக்கு உட்பட்ட வேலைகளை மட்டுமே செய்வதுதான் சரியாக இருக்கும். அதையும் மீறி கவர்னர் தொடர்ந்து செயல்படுகிறார் என்று சொன்னால் பிஜேபி வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறது. ஆமாம் இந்த நாடாளுமன்ற தேர்தலோடு நாடாளுமன்றத் தேர்தலை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட்டு பாகிஸ்தான், இலங்கை போல அதிபர் ஆட்சியை கொண்டுவர இருப்பது தான் அந்தத் திட்டம். பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஜோதி நரசிம்மன்
ஆசிரியர்