அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் எம்.ஜி.ஆரின் கொள்கை முடிவுக்கு நேர் எதிராக செயல்படுகிறார் எடப்பாடி விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேச்சு.
அப்போது கட்சியின் சட்டவிதிகளை காலில் போட்டு மிதிக்க அதிமுக இயக்கத்தை எடப்பாடி பழனிசாமியின் தாத்தா உருவாக்கவில்லை என்று ஓ.பி.எஸ் பொங்கி எழுந்துள்ளார். விழுப்புரத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது;-

அதிமுக என்ற இயக்கம் அதிமுக கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியை தொண்டர்கள் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் என்ற கட்சி சட்ட விதிகளை அன்றே எம்.ஜி.ஆர் உருவாக்கியுள்ளார். இப்படி தான் ஜெயலலிதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்த கட்சி தேர்தல் விதியில் எந்த திருத்தமும் கிடையாது என்று அன்றே வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் தலைமை நிலைய பொறுப்பில் இருந்தால் போதும் என்று கூறி எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்ட விதியை மாற்றி, புதிய விதிகளை உருவாக்கி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கிறார். அதிமுக கட்சியின் சட்டவிதிகளை காலில் போட்டு மிதிக்க அதிமுக இயக்கத்தை எடப்பாடியின் தாத்தா வா உருவாக்கினார்.
இவர்கள் உருவாக்கிய விதிகளால் வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம் போன்றோர் தான் பொறுப்புக்கு வர முடியும். சாதாரண தொண்டர்கள் எப்படி உயர்ந்த நிலைக்கு வர முடியும். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு சந்தித்த 8 தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு தேனீ ஒரே தொகுதியில் மட்டும் தான் இரட்டை இலை வெற்றி பெற்றது.

ஈரோடு இடைதேர்தலில் தோல்வியை தான் சந்தித்தார்கள். கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால் எடப்பாடி தலைமையில் தேர்தலை சந்தித்து படுதோல்வி அடைந்திருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணிக்கு இன்னும் யாரும் வரவில்லை. அப்போது கடையை திறந்து வைத்து 2 பெட்டிகளை வைத்து ஐஸ் விற்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் போட்டிப் போட்டு கொண்டு கூட்டணி பேச்சுக்கு வருவார்கள்.
ஆனால் அதிமுகவுக்கு கேவலமான நிலை ஏற்பட்டு விட்டது. அதிமுக தேய்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், வெல்லமண்டிநடராஜன், மாநில நிர்வாகிகள் புகழேந்தி, முன்னாள் எம்.பி சேவல்ஏழுமலை, மருத்துவ அணி கலைச்செல்வன், கமருதீன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.