சட்டமன்றத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சனைக்கு பேசாது மௌனமாய் இருந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காவடி ஆடுகிறார் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-
தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பறிபோன போது, எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு உரிமை மீட்க ஒரு நாளும் உண்ணாவிரதம் இருந்ததில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடிய போது அவர்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்து விட்டு,
தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவராச்சே, இது மட்டுமா, எத்தனையோ அத்தனை தகிடுத்தத்தங்களையும், மறந்து விட்டு இன்று உண்ணாவிரத நாடகமாடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

சட்டமன்றத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சனைக்கு பேசாது மௌனமாய் இருந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சிக்கு காவடி ஆடுகிறார். அவர் ஆட்சியில் இருந்த போது, சபாநாயகர் தனபாலை வைத்து என்னென்னவெல்லாம் செய்தார் என்பதை மறந்து விட்டார் போல.
எத்தனை முறை மக்கள் பிரச்சனையை பேச வந்த திமுகவை சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றினார். அதுவும் மறந்துவிட்டார் போல, எல்லாம் நாடகம், எடப்பாடி பழனிசாமி செய்வது அரசியல் நாடகம் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்த கள்ளசாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும்,
பாஜகவும் ஆதாய அரசியல் செய்கின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் கொடுமையிலும் கொடுமை தான். அதற்குரிய தக்க நடவடிக்கைகளை தமிழக அரசு உடனுக்குடன் செய்தது, செய்கிறது. கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

பல அதிகாரிகள் மாவட்ட ஆட்சி தலைவர்கள் என இடமாற்றம் செய்யப்பட்டார்கள், நீக்கப்பட்டார்கள். கள்ளச்சாராய தொடர்புடையோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்துழைக்காமல், திசை திருப்பும் அரசியலை கையில் எடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிசாமி நாடகமாடுகிறார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து உண்மையாகவே எடப்பாடி பழனிசாமி விவாதிக்க தயாராக இல்லை. ஆனால் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை வைத்து திட்டமிட்டு அரசியல் செய்கின்றார். ஏன்? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கள்ளசாராய மரணங்கள் நிகழவில்லையா?
அதற்காக நான் கள்ளக்குறிச்சியை ஞாயப்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் 53 பேர் உயிரிழந்தனர்.

200 பேரின் பார்வை பறிபோனது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில் கள்ளசாராயம் ஒழிந்ததா? அப்போதெல்லாம் எங்கிருந்தார் எடப்பாடி பழனிசாமி? பாஜக ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் ஏழெட்டு ஆண்டுகளில் பல்வேறு கள்ளசாராய மரண சம்பவங்கள் நடந்தேறின.
ஒவ்வொரு முறையும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநில முதல்வர்களை பதவி விலகக்கோரி யாரும் கூறவில்லை. அதேபோல் அதிமுக ஆட்சியில் நடந்த மரணங்களுக்கு யாரும் பதவி விலகுமாறு கூறவில்லை.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்ற அற்ப ஆசை தலைக்கு ஏறுவது தான் ஏன் என்று தெரியவில்லை? இது என்ன தர்ம நியாயம். நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதியிலும் நாக்கை புடுங்கி கொள்ளும் அளவிற்கு படுதோல்வியடைந்து,

மண்ணை கவ்விய எடப்பாடி பழனிசாமி வெட்கமே இல்லாமல் கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு உண்ணாவிரதம் இருக்கிறார். அன்று தூத்துக்குடி காவல் நிலையத்தில் இருவர் இறந்ததற்கு சிபிஐ விசாரணை கேட்டார்.
அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின். இப்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்கிறோம் என்று பெரிய புத்திசாலி போல கேள்வி கேட்கிறார் பழனிசாமி. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால்,
குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்திருந்தால் சிபிஐ விசாரணை கூட கேட்கலாம் தவறில்லை. ஆனால், அனைத்து நடவடிக்கைகளும் எடுத்ததை பார்த்த பிறகும் சிபிஐ விசாரணைக்கு கேட்கிறார் என்றால்,

அதுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நாடகம். அதிமுகவின் தொடர் தோல்வியை மூடிமறைக்க எடப்பாடி பழனிசாமி காட்டும் கபடநாடக வித்தை இது. பாஜகவின் பத்தாண்டு கால பாசிச அழிவு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை போன கட்சி அதிமுக.
சிறுபான்மை இஸ்லாமிய இன மக்களுக்கும், ஈழத் தமிழ் மக்களுக்கும் பச்சைத் துரோகம் இழைத்தது அதிமுக என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். இதேபோல் தான் பாஜகவின் அனைத்து மக்கள் விரோத சட்டங்களுக்கும் ஆதரவாக இருந்து செயல்பட்ட ஓடிசா நவீன் பட்நாயக்கும்,

ஆந்திரா ஜெகன் மோகன் ரெட்டியும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதை அதிமுக மறந்து விடக்கூடாது. மக்களுக்கான அரசியலை செய்ய எடப்பாடி கற்றுக்கொள்ளட்டும். மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமி செய்வது கபட நாடகம் தான் என்பது மக்களுக்கு தெளிவாக புரியும் என்று கருணாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.