உண்மையான நம்பிக்கை துரோகி எடப்பாடி தான் என்று ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.
அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி, பின்னர் ஓபிஎஸ் அணியில் சேர்ந்தார். தற்போது அங்கிருந்து வெளியே வந்து ஒருங்கிணைப்பு குழு என்று ஒன்றை ஆரம்பித்துள்ளார். சேலம் வந்த பெங்களூரூ புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா ஊழல்வாதி என திட்டிய பாமக, தற்போது அவரது பெயரை சொல்லி ஓட்டு கேட்கிறது. ஜெயலலிதா மீதான வழக்கில் பெங்களூரு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தண்டனை விதித்தார். மேல்முறையீட்டில் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற வேண்டும் என்பதற்காக ஜி.கே.மணி மூலம் கர்நாடக முதல்வரிடம் கடிதம் கொடுத்தவர் தான் ராமதாஸ். அப்படிப்பட்டவர்கள் தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் ஜெயலலிதா படத்தை வைத்து ஓட்டு கேட்கலாமா?

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது. கட்சி தேய்ந்து கொண்டே போகிறது. கட்சியை ஒருங்கிணைக்க சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் தயாராக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி மட்டும் எதிர்க்கிறார். பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடியை நம்பிக்கை துரோகி என கூறுகிறார்.
எடப்பாடியும் அண்ணாமலையை பார்த்து துரோகி என கூறுகிறார். அதில் உண்மையான நம்பிக்கை துரோகி எடப்பாடி தான். இதை தெரிந்து கொள்ள அண்ணாமலைக்கு இரண்டு ஆண்டுகளாகி இருக்கிறது. இருவரும் நேரில் பார்த்தால் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் நிலை இருக்கிறது.

இதோடு அண்ணாமலை நிறுத்திக்கொள்ள கூடாது. எடப்பாடியின் ரகசியங்கள் அவருக்கு தெரியும். எனவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி விட வேண்டும். எடப்பாடி சிறைக்கு சென்றால் தான், அதிமுக ஒருங்கிணையும். இவ்வாறு புகழேந்தி கூறினார்.