- தீபாவளிக்கு இன்னும் 36 நாட்கள் உள்ள நிலையில் பட்டுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 41 பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் – போதுமான மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள்,
தீத்தடுப்பான்கள் வைக்கப்பட்டுள்ளதா? அவசர காலத்தில் வெளியேற திறந்த வெளியுடன் கூடிய அவசர வழி உள்ளதா? உள்ளிட்ட 18 விதிமுறைகளை ஆய்வு செய்த வருவாய்த்துறையினர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் போடப்பட்டு அதிக அளவில் பட்டாசுகள் விற்பனையாகும்.
இந்த பட்டாசு கடைகளை அமைப்பதற்கு வருவாய்த்துறை மூலம் உரிய அனுமதி பெற்று லைசென்ஸ் பெற்றால் மட்டுமே பட்டாசு கடை நடத்த முடியும். லைசென்ஸ் வைத்திருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை அதை புதுப்பித்து பட்டாசு கடை நடத்துவதற்கு ஏதுவான இடம் என்று வருவாய்த்துறை மூலம் சான்றிதழ் பெற வேண்டும்
தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் 36 நாட்கள் உள்ள நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் வருவாய்த்துறையினர் பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள 24 பட்டாசு கடைகளிலும் ஆய்வு நடத்தினர்.
அப்போது உரிமம் வழங்கிட கோரும் கட்டிடம் கான்கிரீட்டினால் கட்டப்பட்டுள்ளதா? கட்டிடத்தில் உள்ளே நுழையவும், அவசர காலத்தில் வெளியேற திறந்த வெளியுடன் கூடிய அவசர வழி உள்ளதா? கட்டிடத்தின் பரப்பளவு 9 ச.மீட்டருக்கு குறையாமலும், 25 சதுர மீட்டருக்கு மிகாமலும் உள்ளதா? தீயணைப்பு வாகனங்கள் எளிதில் அணுகும் வண்ணம் அமைவிடங்கள் உள்ளதா? தீப்பொறியை உருவாக்கக்கூடிய மின்சாதனங்கள், மின்கலங்கள், எண்ணை விளக்குகள் மற்றும் இது போன்ற இதரப் பொருட்கள் எதுவும் உள்ளதா? 50 மீட்டர் தொலைவிற்குள் குடியிருப்புகள், கல்விக்கூடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனைகள், கடைகள், சந்தைகள், ஆலைகள், வழிபாட்டுத்தலங்கள், ஆபத்தான பொருட்களை சேமித்து வைக்கும் இடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுச்சாலைகள், இருப்பு பாதைகள், நீர்வழிப்பாதைகள், உயர் மின்னழுத்த கம்பிகள் ஏதும் அமைந்துள்ளதா? போதுமான மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள்.
தீத்தடுப்பான்கள் வைக்கப்பட்டுள்ளதா? என்ற 18 விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் அதிராம்பட்டினத்தில் 8 கடைகளிலும், மதுக்கூரில் 6 கடைகளிலும், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு, அலிவலம் ஆகிய ஊர்களில் தலா ஒரு கடையிலும் ஆக மொத்தம் 41 கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.