ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் தயாரிக்க பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி போலீசார் சோதனை செய்தனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்:
இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. இவர் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும், சினிமா தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் சிக்கியதையடுத்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் கடந்த மாதம் 23ஆம் தேதி சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
ஜெய்ப்பூரில் கைது: இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3,500 கிலோ போதைப் பொருள் தயாரிப்புக்கான மூலப் பொருளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சென்னை அழைத்து வரப்படும் போதை பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக்.. சிக்க போகும் தலைகள்! டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் புள்ளிகள் பலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை வழக்குப்பதிவு: இந்நிலையில், ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தலில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை இனி விசாரிக்க தொடங்க இருப்பதால் இந்த சம்பவத்தில் யார்?யார்? சிக்குவார்களோ தெரியவில்லை.