குஜராத்தில் ஸ்கூபா டைவிங் மூலம், ஆழ்கடலில் மூழ்கி துவாரகா நகரை பிரதமர் மோடி வழிபட்டார். இது மிகவும் தெய்வீகமான அனுபவம் என அவர் குறிப்பிட்டார். எனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதனால் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவை ஓகாவுடன் இணைக்கும் வகையில் அரபிக்கடலின் குறுக்கே 2.32 கிமீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலமான ‘சுதர்ஷன் சேது’ பாலத்தை திறந்து வைத்தார். மேலும், துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலிலும் பிரதமர் மோடி வழிபட்டார்.

அரபிக்கடலில் மூழ்கியதாக நம்பப்படும் பண்டையகால துவாரகா நகரின் எச்சங்களையும் அவர் பார்வையிட்டார். பெய்ட் துவாரகா தீவின் அருகே பஞ்ச்குய் பகுதியில் துவாரகா கடற்கரையில் பிரதமர் மோடி ஸ்கூபா டைவிங் உபகரணங்களை அணிந்து கொண்டு ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் ஆழ்கடலுக்குள் சென்றார்.
அப்போது கடலுக்கு அடியில் சென்றதும் அவர் அங்கேயே சம்மணமிட்டு கிருஷ்ணரை வழிபட்டு அவருக்கு மயில் தோகையை காணிக்கையாக செலுத்தினார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்த பிரமதர் மோடி;-

ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது. ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட பழங்கால சகாப்தத்துடன் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்’’ என்றார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இது அம்மாநிலத்தில் அமையும் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை. மேலும், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப் பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் புதிதாகக் கட்டப்பட்ட மற்ற 4 எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மோடி திறந்து வைத்தார்.

ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளில் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியும், சுற்று சுவரை தவிர வேறு எதையும் ஒன்றிய அரசு கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.