Chengalpattu : தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11/03/2025) செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர் “தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். தமிழ்நாட்டின் உரிமைக்காக யாருக்கும் பயப்படாமல் போராடுவோம். இதே பொறுப்புணர்வுடன் மக்களாட்சியை நடத்துவோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கல்வியை தனியார்மயம் ஆக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியில் மதவாதத்தை புகுத்துவது, சிறிய பிள்ளைகளுக்கு கூட பொதுத்தேர்வு, கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு, கல்வியில் ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கிறது . இதையெல்லாம் பார்த்துதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். ஆனால், ‘இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் தான் உங்கள் நிதி உங்கள் கைக்கு வரும்’ என்று பிளாக்மெயில் செய்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
2000 கோடி இல்லை, நீங்கள் 10 ஆயிரம் கோடி வழங்கினாலும், உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் .
தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள், அராஜகவாதிகள் என்று’ நாடாளுமன்றத்தில் நாவடக்கம் இல்லாமல் தர்மேந்திர பிரதான் பேசியிருக்கிறார். ஆனால் பேசிய அரைமணி நேரத்தில் அவர் பேசியதை திரும்பப் பெற வைத்திருக்கிறார்கள் நம்முடைய தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
அவர்களுடைய போர்க்குரலுக்கு என்னுடைய வாழ்த்துகள். அதிமுக உறுப்பினர்கள் போல பாஜக அரசுக்கு லாலி பாடிக்கொண்டு இல்லாமல் தமிழ்நாட்டின் உரிமைக்கு யாருக்கும் பயப்படாமல் போராடுவோம் என்று நிரூபித்திருக்கிறார்கள். ‘40 பேர் சென்று என்ன செய்வார்கள்?’ என்று கேட்டவர்களுக்கெல்லாம் நேற்று சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. இதே போர்க்குணத்துடன் தமிழ்நாட்டுக்காக போராடுவோம். இதே பொறுப்புணர்வுடன் மக்களாட்சியை நடத்துவோம். அதற்கு இப்போது போல் எப்போதும் உங்களுடைய ஆதரவு தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த அரசு விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, கேகே எஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, செல்வம், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், ராஜா, இ.கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், பாலாஜி, எம்.பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, நில நிர்வாக ஆணையர் பழனிச்சாமி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அருண்ராஜ், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாவட்ட ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த அரசு விழாவில் ரூ.508 கோடியில் 50,606 பேருக்கு நலத்திட்ட உதவிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் மேலும் செங்கல்பட்டு மாநகராட்சியில் புதிதாக 5 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்து , முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் .