நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது பாசம் காட்டுவது போல தி.மு.க. நாடகமாடுகிறது என மத்திய மந்திரி எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய இணை மந்திரி எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி சிங் சிலை திறப்பு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்லூரி, நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு துறை நியமனங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் போராட வேண்டிய நிலை இருக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று பேசி உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் சமூக நீதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நீதிமன்றங்கள் அனுமதித்து விட்டன.

இதன்படி பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன. இதனை தொடர்ந்து பல மாநில அரசுகளும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவதாக கூறியிருக்கின்றனர். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவதாக கூறி வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணி தோழர் ராகுல் காந்தி ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மேடை தோறும் முழுங்கி வருகிறாரே… இது மு.க. ஸ்டாலினுக்கு தெரியாதா? நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அவருக்கு திடீர் பாசம் பெருகுகிறது.
பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக ஒரு புல்லைக் கூட கிள்ளிப் போடாத, மு.க ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் ஏமாற்றி வாக்குகள் வாங்க திட்டமிடுகிறார். இவரின் ஏமாற்று வேலையை தமிழக மக்கள் ஒருபோது நம்ப போவதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் பட்டியிலின பழங்குடியின மக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். இதில் தொடர்புடைய குற்றவாளிகளே இன்று வரை கண்டுபிடிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களை பரிசோதனை என்ற பெயரில் வழக்கில் சிக்க வைக்கவும் இந்த அரசு முயற்சிக்கிறது.

இந்த சம்பவங்களில் தி.மு.க.வினர் பின்னணி இருப்பதால் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார். எந்த நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தி.மு.க. தலைமை நாடகமாடுகிறதோ? அதே நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.