நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், தேர்தலை ஒருங்கிணைக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர். பாலு தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து திமுக தலைமை அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க இருக்கிறது. இன்னும் 2 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தங்கள் கட்சியை பலப்படுத்துவதோடு கூட்டணியையும் உறுதி செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

40 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான பணிகளை திமுக தொடங்கி செய்து வருகிறது. திமுக சார்பில், அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரம் பூத்களுக்கு தலா ஒரு பொறுப்பாளரை நியமித்து அவர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என 6 லட்சம் பேர் நியமிக்கப்பட்டனர். கடந்த மாதத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை மேற்பார்வை செய்ய 10 பூத்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டார்.
அதில் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் வாக்குச்சாவடிகள் பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது. மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். அதே நேரத்தில் கூட்டணி குறித்தும், யார் வேட்பாளர் என்பதையும் கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும். தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்குங்கள் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை வழங்கினார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டனர். அப்போது அவர், ‘‘தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும்” என்று தெரிவித்து இருந்தார். திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு, நாடாளுமன்ற தேர்தலை ஒருங்கிணைக்க குழு, தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவை திமுக தலைமை நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி, தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் தலைமை கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, வர்த்தகர் அணி துணைத்தலைவர் கோவி. செழியன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ., அயலக அணி செயலாளர் எம்.எம். அப்துல்லா எம்.பி., மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என். நேரு, துணை பொது செயலாளர்கள் அமைச்சர் ஐ. பெரியசாமி, க. பொன்முடி, ஆ.ராசா எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
திமுகவின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக தொகுதி பங்கீடு குழு விரைவில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடங்கியது #தேர்தல்2024 பணி.! பணி முடிப்போம்.! வெற்றி வாகை சூடுவோம்.! #இந்தியா வெல்லும்.! நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்த குழுவில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 30 வயதே ஆன சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வயது பெண் ஒருவருக்கு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடமளித்திருக்கும் முதல் கட்சி திமுகதான். இதுவரை எந்த கட்சியும் இவ்வாறு செய்ததில்லை.