- தனது எளிமையான செயலால் மக்களை கவர்ந்த மாவட்ட ஆட்சியர்தஞ்சை மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி பொறுப்பேற்றார். அவர் தன்னுடைய எளிமையான செயல்களால் பலரையும் கவர்ந்து வருகிறார். கடந்த மாதம் தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி குழந்தைகளை பள்ளிச் சீருடையுடன் அழைத்து வந்த ஒரு நபரை கண்டித்ததுடன், பள்ளி குழந்தைகளை இதுபோல் பள்ளி நேரத்தில் அழைத்து வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேராவூரணி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் நேற்று புதன்கிழமையும், இன்று வியாழக்கிழமை காலையும் நடைபெற்றது. நேற்று புதன்கிழமை காலை 10 மணிக்கு பேராவூரணிக்கு வந்த ஆட்சியர் இன்று வியாழக்கிழமை பகல் 12 வரை பல்வேறு அரசு பணிகளை ஆய்வு செய்தார். அது தொடர்பான ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி பொதுமக்களிடம் மனு பெற்றார். நேற்று தெற்கு நாட்டாணிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளிடம் மழலை மொழியில் பேசி குழந்தைகளிடம் பேசினார். மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளை கரும்பலகையில் கணக்கு போடச் சொல்லி சரியான முறையில் விடை எழுதிய மாணவர்களை பாராட்டினார். மேலும் அங்கிருந்து ஒரு சிறுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அரசு மானியத்துடன் தொடங்கப்பட்டு வரும் கயிறு தொழிற்சாலை ஒன்றில் ஆய்வு மேற்கண்ட போது, அங்கிருந்த ஒரு மூதாட்டி தங்கள் குடியிருப்புக்கு தண்ணீர் வேண்டும் என கேட்டார். அப்போது அந்த மூதாட்டி தனது செருப்பை கழட்டி விட்டு ஆட்சியரிடம் பேச முயன்ற போது, செருப்பை போட்டால் தான் உங்களிடம் பேசுவேன் என சொல்லிவிட்டு, ஆட்சியருக்கு வந்த இளநீரை அந்த மூதாட்டி இடம் கொடுத்து நீங்கள் இளநீரை குடியுங்கள். உங்களுக்கு தண்ணீரும் தருவேன் என்று இயல்பாக பேசியதால் அந்த மூதாட்டி நெகிழ்ந்து போனார். இதையடுத்து அங்கிருந்து ஆய்வை முடித்துக் கொண்டு வரும்போது சாலையில் நின்றவாறு, ஆட்சியரின் முகத்தை நோக்கிய பெண்ணிற்காக தனது காரை நிறுத்திய ஆட்சியர் அந்த பெண்ணிடம் விபரம் கேட்டு அருகில் இருந்த அவரது வீட்டிற்கு நடந்து சென்று மாற்றுத்திறனாளியான அவரது குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு ஆதார் அடையாள அட்டை கிடைக்க உடனடியாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்தார். ஆட்சியரின் எளிமையான இந்த செயல் அனைவரையும் கவரும் விதமாகவும் இருந்தது.